நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்துகொண்டே வருகிறது. இதனால் கடந்த நான்கு மாதங்களாக தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. அண்மையிலிருந்துதான் சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
முதல் லாக்டவுன் சமயத்தில் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல மிகவும் சிரமப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள், வீடு திரும்ப பல உதவிகளை செய்தார் சோனு சூட். இதுமட்டுமல்லாமல் இந்த காலகட்டத்தில் பலருக்கும் உதவி புரிந்துவருகிறார்.
தற்போதைய சூழ்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கின்றன. இந்த சமயத்தில் மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வான நீட் மற்றும் பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு ஆகியவை குறித்து பல்வேறு தேதிகள் மாற்றம் நடந்தது.
இறுதியாக செப்டம்பர் 1 மற்றும் 6 தேதிகளில் ஜேஇஇ (மெயின்) நுழைவுத் தேர்வும், செப்டம்பர் 27ம் தேதி ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வும், செப்டம்பர் 13-ம் தேதி நீட் தேர்வும் நடத்தப்படும் என தேர்வுகளை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்திருந்தது.
இந்த தேர்வை பல லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள். இந்த கரோனா அச்சுறுத்தலில் தேர்வை நடத்தாமல் தள்ளி வைக்க வேண்டும் என்று எதிர்கட்சியினர், முக்கிய பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சோனு சூட் பதிவிட்டுள்ள ட்விட்டில், “தேசத்தின் தற்போதைய சூழலில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்பது இந்திய அரசாங்கத்துக்கு எனது வேண்டுகோள். இந்த கோவிட் நெருக்கடி காலத்தில் நாம் மாணவர்களின் மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.