கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து இந்தியா முழுவதும் லாக்டவுன் அமலில் உள்ளது. இதனால் பலரும் தங்களின் தினசரி வேலையை இழந்து தவித்து வருகின்றனர்.
தொடக்கத்தில் தங்களது வேலைக்காக வட இந்தியாவிலிருந்து, தென்னிந்தியாவிற்கு வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். அப்போது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்ததால் மிகவும் சிரமத்திற்கு ஆளான புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரம் கி.மீ. நடந்தே சொந்த ஊர் சென்றனர்.
அந்த சமயத்தில் சொந்த ஊர் செல்ல கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு உதவினார் நடிகர் சோனு சூட். சுமார் 20,000க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை பேருந்துகள், ரயில், விமானம் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், கரோனா ஊரடங்கால் தமிழகத்தை சேர்ந்த 90க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சிக்கி தவித்து வந்தனர்.
இதை கேள்விப்பட்ட நடிகர் சோனு சூட், தனி விமானம் மூலம் அவர்களை சென்னை அழைத்துவர ஏற்பாடு செய்தார். அதன்படி, இன்று அதிகாலை அனைவரும் விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தனர். சோனு சூட்டின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.