கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ள நிலையில், கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தங்குவதற்காக தன் ஹோட்டலை இலவசமாக வழங்கிய பாலிவுட் நடிகர் சோனு சூட் நோன்பு வைக்கும் 25,000 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தினமும் உணவு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு இன்று ஆரம்பமாகவுள்ளதை முன்னிட்டு, தனது தந்தை சக்தி சாகர் சூட் பெயரில் ‘சக்தி ஆனந்தம்’ என்ற ஒரு அறக்கட்டளை ஒன்றை அவர் தொடங்கியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறும்போது...
''தற்போது சூழல் மிகவும் கடினமானதாக உள்ளது. ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்கவேண்டியது இந்தச் சூழலில் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த அறக்கட்டளையின் மூலம் நோன்பு இருப்பவர்களுக்காக தினமும் உணவு வழங்க இருக்கிறேன். இதனால் நாள் முழுக்க நோன்பு இருந்தபிறகு அவர்கள் பசியோடு இருக்கவேண்டிய அவசியம் இருக்காது. இந்த உதவிகள் மேற்கு வங்கம், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்திருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்'' என அறிவித்துள்ளார். பாலுவுட் நடிகர் சோனு சூட் தமிழில் ஒஸ்தி மற்றும் தேவி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.