நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நம்மிடம் பேசிய கவிஞர் சினேகன், “கேப்டனுடைய மறைவு ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பெரும் துயரம். அவருடைய வாழ்நாள் முழுக்க ரொம்ப எதார்த்தமாகவும் ரொம்ப கருணையோடும் வாழ்ந்த ஒரு மனிதர். அரசியல், சினிமாவை தாண்டி ஒரு மிகச் சிறந்த மனித நேயமிக்க மனிதர். இது அவருடைய நெருங்கிப் பழகிய எல்லாருக்குமே தெரியும். நானும் அவருடைய படங்களில் வேலை பார்த்திருக்கிறேன். சின்னவங்க முதல் பெரியவங்க வரை அவர்களின் தொழிலுக்கு தகுந்த மரியாதையை கொடுப்பார். அவர்களோடு அக்கறை செலுத்துவது, அவரிடம் கத்துக்க வேண்டிய நிறைய விஷயங்களில் ஒன்று. அந்த வகையில் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை மீறி இவ்ளோ எதார்த்தமா ஒரு மனிதர் வாழ்வது ஆச்சரியம் தான்.
இன்றைக்கு இருக்கும் சிறு நடிகர்கள் கூட தன்னை சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கிறாங்க. ஆனால் அவர் அப்படி அல்ல. எப்போதுமே கேமராவுக்கு முன்னால் மட்டும்தான் ஒப்பனைகளோடு இருக்கும் மனிதராக நிற்பாரே தவிர வாழ்நாள் முழுக்க எங்கயுமே ஒரு நடிகராகவோ அரசியல் தலைவராகவோ அல்லது தான் ஒரு ஆளுமை என்கிறதையோ நிலைநிறுத்திக்க ஆசைப்பட்டதே இல்லை. காரணம் ஒரு சாதாரண மனிதராகத்தான் தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார். பேரன்பும் பெரும் தேடுதல் கொண்ட ஒரு மனிதர்.
உடல்நலக்குறைவு எல்லாருக்கும் வருவதுதான். ஆனால் அவர் மீண்டும் எழுச்சி பெற்று வருவார். சினிமா களத்திலும் சரி அரசியல் களத்திலும் சரி தனக்கான கனவுகளை நிறைவேற்றுவார் என்ற பெரிய நம்பிக்கை எனக்கும் இருந்தது. அந்த நம்பிக்கை இவ்வளவு விரைவாக பொய்த்துப் போகும் என்பது பெரும் அதிர்ச்சியா இருக்கு. அவர் இடத்தை நிச்சயமா யாராலுமே நிரப்ப முடியாது. சாகுற வரைக்கும் கூட தன்னை சுற்றியுள்ள எல்லாரும் நல்லா இருக்க வேண்டும் என நினைத்த ஒரு நேர்மையாளர். அவரை வெளியில் இருந்து பார்க்கும்போது கோபக்காரர் என்று சொல்வார்கள். அப்படி எல்லாம் அவர் கிடையாது. அவர் மாதிரி கோபப்படுபவரும் இல்லை. கோபப்பட்டு அதை மறைச்சிட்டு அரவணைப்பவரும் இல்லை. அந்த கோபம் கூட அறம் சார்ந்த கோபமாக இருக்கும். என்னை பொறுத்தவரை இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார். அந்த காலகட்டத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது முக்கியமான தருணம். அவருடைய பெரும் கனவுகளும் ஆசைகளும் அவருடைய பிள்ளைகள் மூலமாகவும் நிறைவேற வேண்டும் என்பது என்னுடைய ஆசை.
அவரின் ராஜ்ஜியம் படத்தில் எல்லா பாடல்களையும் நான்தான் எழுதினேன். அதில் முக்கியமான பாடல் கதாநாயகனுடைய அறிமுக பாடல். குறிப்பாக அவருடைய கட்சிக் கொடியும் அரசியல் பிரவேசமும் அந்த பாட்டில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த படத்தில் எல்லா பாடலையும் எழுதி முடித்த பிறகு அந்த பாடல் மட்டும் காலதாமதமாக ஆகிக் கொண்டு வந்தது. நானும் இயக்குநரிடம் கேட்டுக் கொண்டே வந்தேன். ஒரு கட்டத்தில் விஜயகாந்த் சார் இயக்குநரிடம், ‘ஏன் அந்த பாட்டு வரல, சினேகன் என்ன லேட் பண்றாப்லயா..’ எனக் கேட்டுள்ளார். அதற்கு எம்.ஜி.ஆருக்கு செண்டிமெண்டா வாலி சார்தான் எழுதியிருக்காரு. அதனால் அந்த ஒரு பாட்டை மட்டும் வாலி சாரிடம் கொடுத்து வாங்கலாம் என காலதாமதம் ஆகிறது என சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் மற்ற எந்த நடிகராக இருந்தாலும் பேராசையில் சரி என சொல்லி ஒப்புக்கொண்டிருப்பார்கள். ஆனால் கேப்டன் அப்படி செய்யவில்லை. இந்த படத்தை பொறுத்தவரை எல்லா பாட்டையும் சினேகன் தான் எழுதியிருக்கார் என ஏற்கனவே அவருக்கு சொல்லிவிட்டோம். அப்படி சொன்னவர் கிட்ட என்ன குறை கண்டீங்க. வாலியோடு என்னை ஒப்பிட விரும்பவில்லை. அவர் ஒரு லெஜண்ட்.
ஆனாலும் சினேகன் கிட்ட சொன்ன வார்த்தையை ஏன் மீறுரீங்க. கண்டிப்பா கொடுங்க. சினேகன் நல்லா எழுதுவாரு. அப்படின்னு அவர்கிட்ட சத்தம் போட்டது மட்டுமல்லாமல், சூட்டிங் நடந்த ஹைதராபாத்திற்கு இங்கிருந்து டிக்கெட் போட்டு வரவழைத்தார். என்னை பார்த்ததும் எனக்கு எல்லாமே தெரியும், முதலில் போய் சாப்பிடுங்க என்றார். பின்பு நீ எழுது என்றார். 2 மணி நேரத்தில் அந்த பாட்டை எழுதி கொடுத்தேன். அதில் ‘கோட்டை முதல் குமரி வரை கட்டு ஒரு மாலை... ஏழைகளின் தோழன் என்று போடு இவன் மேல்...’ என்று வரும் வரியை புளகாங்கிதப்பட்டு பேசினார். இந்த வரிகள் எம்.ஜி.ஆர் ஐயாவை போல் ஒரு ஆளுக்கு எழுத வேண்டியது. உங்க அன்பை இந்த பாட்டு வரி மூலம் காட்டியிருக்கீங்க என நெகிழ்ந்து போனார். அதற்கு தகுதியானவர்தான் நீங்க என்று சொன்னபோது, எவ்ளோ உயரத்திற்கு போனாலும், ஒரு வேளை எனது மரணத்தின் கடைசி நொடி வரையும் இந்த பாட்டு ஒலிக்கப்படும் சினேகன் என்றார். அந்த நிமிடங்களை இப்போது நினைத்தாலும் கூட கண்ணீர் வருகிறது. சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும் என்று சிறிய கவிஞனை கூட காயப்படுத்தாமல் இருந்தார். நாக்கும் வாக்கும் ஒன்றாக வாழக்கூடிய மனிதர்களில் மிக அரிதான மனிதர். உடல்நலத்தில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் அவருடைய ஆசைகள் நிறைவேறியிருக்குமோ என்ற வருத்தம் இருக்கு. அதோடு எல்லாரையும் கவனித்த ஒரு மனிதர் தன்னை கவனிக்க மறந்துவிட்டாரோ என்ற வருத்தமும் இருக்கு. இந்த துயரத்தை எப்படி கடந்து வெளியே வரப்போகிறோம் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது” என உருக்கமுடன் பேசினார்.