சிவகார்த்திகேயன் மடோன் அஷ்வின் இயக்கும் 'மாவீரன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை 14 ஆம் தேதி வெளியாகிறது. மேலும் ரவிக்குமார் இயக்கத்தில் இவர் நடித்த 'அயலான்' படம் நீண்ட காலமாக உருவாகி வரும் நிலையில் இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இதையடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இன்னும் பெரியிடப்படாத நிலையில் தற்காலிகமாக 'எஸ்.கே 21' என அழைக்கப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் பூஜை வீடியோ கடந்த 5ஆம் தேதி வெளியானது. அதில் கமல், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதில் ராணுவ அதிகாரியாக சிவகார்த்திகேயன் நடிப்பதாகவும் அது சம்மந்தமான காட்சிகளை இந்த செட்யூலில் படக்குழு படமாக்கி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாம். ஜி20 மாநாடு வருகிற செப்டம்பர் மாதம் டெல்லியில் நடப்பதால் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான காஷ்மீரிலும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாம். இதைத் தொடர்ந்து படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜி20 கூட்டமைப்பில் தற்போது 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்களாக இருக்கின்றன. பொருளாதாரம், கடன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதங்களை இந்த கூட்டமைப்பு முன்னெடுக்கும். ஒவ்வொரு ஆண்டும் உறுப்பினராக இருக்கும் ஒவ்வொரு நாடும் தலைமை ஏற்று ஜி20 மாநாட்டை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு இந்தியா தலைமை ஏற்று நடத்தி வருகிறது.