நடிகர் சிவகுமார் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது, ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் அவர் செய்யும் செயல் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடும் விமர்சனத்தையும் சந்தித்தது. அந்த வகையில் காரைக்குடியில் சில தினங்களுக்கு முன்பு பழ. கருப்பையா எழுதிய ‘இப்படித்தான் உருவானேன்’ நூல் வெளியீட்டு விழாவில் சிவக்குமார் கலந்துகொண்டபோது, வயதான ஒருவர் அவருக்கு பொன்னாடை அணிய காத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரைப் பார்த்த சிவகுமார், அவர் கையில் வைத்திருந்த பொன்னாடையை பிடுங்கி தூக்கி எறிந்தார். இந்த செயலுக்கு பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்து வந்தது.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சிவகுமார் மற்றும் அந்த பெரியவர் இருவரும் ஒன்றாக வீடியோ வாயிலாகப் பேசியுள்ளனர். சிவகுமார் பேசியதாவது, “அந்த பெரியவர் யாரோ எவரோ இல்லை. என் தம்பி. 50 ஆண்டுகால நண்பர். அவர் கல்யாணத்தையே நான்தான் பண்ணி வச்சேன். அது மட்டுமல்ல, மகள் கல்யாணத்துக்கும் போயிருக்கேன். பேரன் கல்யாணத்துக்கும் போயிருக்கேன். பொதுவா ஒரு நிகழ்ச்சிகளில் எனக்கு யாராவது சால்வை அணிய வந்தார்கள் என்றால், அதை திருப்பி அவங்களுக்கே போத்திருவேன். சால்வை அணியும் பழக்கம் எனக்கு கிடையாது.
அன்னைக்கு 6 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிச்சு 10 மணி ஆகும்போதுதான் நான் பேசுனேன். அப்போவே செம்ம டயர்ட் ஆகிருச்சு. கீழ கரீம் நின்னுக்கிட்டு இருந்தார். எனக்கு சால்வை போடுறது பிடிக்காது என்பதை தெரிஞ்சு அந்த மனுசன் கையில் சால்வையோடு நின்னுக்கிட்டு இருந்தார். பொது இடத்தில் சால்வையை வாங்கி கீழ போட்டது தப்புதான். அதுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வருத்தமும் படுகிறேன்” என்றார். சிவகுமார் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் நடுவே அந்த பெரியவரும், சிவகுமாருக்கும் அவருக்கும் உண்டான நட்பை பற்றி பேசினார். மேலும் சிவகுமாருக்கு சால்வை போடுவது பிடிக்காது என்பது தெரிந்தும் சால்வை எடுத்து வந்தது தப்பு தான் எனக் கூறினார்.