விவசாயிகளுக்கு துணை நின்று நம்பிக்கையை ஏற்படுத்தவும், அவர்களைக் கெளரவப்படுத்தவும் நடிகர் கார்த்தி நடத்திவரும் உழவன் ஃபவுண்டேஷன் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், உழவன் ஃபவுண்டேஷனின் 'உழவர் விருது 2022' விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் நடிகர் கார்த்தி, சூர்யா, சிவகுமார், உழவர் ஃபவுண்டேஷனின் ஆலோசனைக்குழுவின் உறுப்பினர்களான மண்ணியல் உயிரியலாளர் சுல்தான் அகமது இஸ்மாயில், இயற்கை வேளாண் வல்லுநர் பாமயன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
விழாவில் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிய நடிகர் சிவகுமார் தன் தாயார் குறித்து பேசுகையில், "உழவன் ஃபவுண்டேஷன் அமைப்பை நடத்திவரும் கார்த்தி, ஒரு ஏழை விவசாயின் பேரன். விவசாயி என்றாலே எலும்பும் தோலுமாக நெஞ்சுக்கூடு தூக்கிக்கொண்டு தோளில் துண்டு போட்டுக்கொண்டு இருப்பான் என்பதைத் தாண்டி, இளைய தலைமுறையினரும் விவசாயத்திற்குள் வந்து நவீன முறையில் விவசாயம் செய்து, நமக்கு கிடைக்க வேண்டிய உணவை நாமே உற்பத்தி செய்து, விவசாயத்தையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த உழவன் அமைப்பு தொடங்கப்பட்டது.
நான் பத்து மாத குழந்தையாக இருக்கும்போது என் அப்பா இறந்துவிட்டார். என் அம்மாதான் தனி ஆளாக நின்று என்னை வளர்த்தார். என் அம்மா இறந்து, அப்பாதான் என்னை வளர்க்க வேண்டும் என்ற நிலை வந்திருந்தால் நான் சின்ன வயதிலேயே அனாதை ஆகியிருப்பேன். எந்த அப்பன்காரனாலும் பத்து மாச குழந்தையை வளர்க்க முடியாது. நான் பிறந்த காலகட்டத்தில் எங்கள் ஊரில் ராகி, கம்பு, திணை, வரகு, சோளம் எதுவும் விளையாது. திரும்பிய பக்கமெல்லாம் அரளிச் செடியும், எருக்கம் செடியும்தான் வளர்ந்திருக்கும். அவை இரண்டையும் சாப்பிட்டால் உயிர் போய்விடும். ஆனால், சாமி கொடுத்த குழந்தையை கொள்ளக்கூடாது என்று என் அம்மா வளர்த்ததால்தான் உங்கள் முன் இன்று உயிரோடு நிற்கிறேன்.
அம்மாவின் 81 வயதுவரை அவர் படுக்கைக்கு தூங்கச் சென்றதையோ, படுக்கையில் இருந்து எழுந்ததையோ நான் பார்த்ததில்லை. தாமதமாக தூங்கி, சீக்கிரமே எழுவார். அதிகாலையே எழுந்து பழைய சோற்றை சாப்பிட்டுவிட்டு விவசாய வேலைக்குச் சென்றுவிடுவார். வருஷத்துக்கு இரண்டு சினிமாதான் என்னால் பார்க்க முடியும். அதுவும் மேட்னி ஷோதான். நைட் ஷோ போனால் பையன் கெட்டுப் போய்விடுவான் என்று விடமாட்டார். ஒருநாள், என் அம்மாவிடம் சென்று அம்மா நான் சினிமா பார்க்க போறேன் என்றேன். நேத்துதானடா போன... இன்னைக்கும் எதுக்கு என்று அவர் கேட்க, இல்லமா... நேத்து போனது சிவாஜி நடித்த படம், இது எம்.ஜி.ஆர். நடித்த படம், முதல்முதலா கலர் படம் வந்துருக்கு என்றேன். உடனே, பருத்தி மார் பிடுங்கிக்கொண்டிருந்த அவர், உள்ளங்கையில் சுற்றியிருந்த துணியைக் கழட்டினார். கொப்பளமும் ரத்தமுமாக கை இருந்தது. நான் இப்படி கஷ்டப்படுறேன் உனக்கு சினிமா வேண்டுமாயா என்று கையைக் காட்டினார். அந்த இடத்தில் நான் செத்தே போய்விட்டேன். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டுதான் என் தாயார் என்னை உருவாக்கினார்" என கண்ணீர் மல்க கூறினார்.