தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் நடன இயக்குனர்களில் ஒருவர் தினேஷ். ஆடுகளம் படத்தில் வரும் 'ஒத்த சொல்லால' பாடல் மூலம் தேசிய விருது வென்ற இவர் ஒரு 'குப்பை கதை' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மனிஷா யாதவ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குனர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமரசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது விழாவில் பேசிய சிவகார்த்திகேயன்.... "இந்த விழாவில் கலந்துகொள்வது என் கடமை. இதன்மூலம் தான் தினேஷ் மாஸ்டருக்கு கைமாறு செய்யமுடியும். விஜய் டிவி ஷோவுல ஆடும்போது உடம்பு அலுக்காமல், வேர்க்காமல் ஆடணுமா, தினேஷ் மாஸ்டரை தொடர்பு கொள்ளுங்கள் என கிண்டலடித்தேன்.. ஆனால் எதிர்நீச்சல் படத்தில் என்னை ஆடவைத்து பெண்டு நிமிர்த்திவிட்டார்.. ஒரு துறைல இருந்து இன்னொரு துறைக்கு கால் வைக்கும்போது உனக்கு ஏன்ய்யா இந்த வேண்டாத வேலை என கேட்கத்தான் செய்வார்கள்.. அதையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு போகவேண்டும். நடனத்துக்காக மட்டும் அல்லாமல், கதைக்காகவும், கதாபாத்திரத்திற்காகவும் இந்தப்படத்தை தினேஷ் மாஸ்டர் ஏற்று நடித்துள்ளது பாராட்டக்கூடிய விஷயம். ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்தப்படத்தை வாங்கியிருப்பது, மற்றவர்கள் எல்லாம் இந்தப்படத்தில் உங்கள் படத்தை பாராட்டுவது என 5௦ சதவீதம் தாண்டி விட்டீர்கள். மக்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் நூறு சதவீதம் வெற்றியை அடைவீர்கள்" என வாழ்த்தி பேசினார்.