சிவகார்த்திகேயனின் அமரன் படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. வசூலிலும் உலகம் முழுவதும் ரூ.250 கோடியைக் கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடித்து கொண்டே தனது அடுத்த படமான ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடித்துக் கொண்டு வந்தார். இப்படம் சிவகார்த்திகேயனின் 23வது படமாக உருவாகி வருகிறது.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். அனிருத் இசைப்பணிகளை மேற்கொள்கிறார். ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கியது. பின்பு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இடையில் அமரன் பட புரமோஷன் பணிகளால் இப்படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்ளாமல் இருந்தார்.
இந்த நிலையில் அமரன் படம் வெளியானதைத் தொடர்ந்து தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் அடுத்தக் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். படத்தின் படப்பிடிப்பு சென்னைக்கு அருகே உள்ள பெருங்களத்தூரில் நடந்தது. அதில் சிவகார்த்திகேயன் மேம்பாலத்தில் இருந்து கீழே குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அதை காண மக்கள் குவிந்தனர். மேலும் அப்பகுதியில் போகும் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்த்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.