கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த தீபாவளியன்று வெளியான படம் அமரன். இந்தப் படம் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த நிலையில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படம் தொடர்பாக ஒரு நேர்காணலில் பேசிய சிவகார்த்திகேயன், விஜய் குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில், “விஜய் சார் கையில் விருது வாங்கியது ரொம்ப ஸ்பெஷலாக இருந்தது. அந்த விருது விழாவில் அவர் விருது வாங்க வந்திருந்தார். ஆனால் விருது வாங்கிவிட்டு செல்லாமல் எனக்கு விருது கொடுத்தார். அதோடு கிட்ஸை நான் பிடிச்சிவிட்டதாக சொல்லி அன்பை வெளிப்படுத்தினார்.
இதே மாதிரி கோட் படத்திலும் துப்பாக்கி சீன் வரும் போது அவரது அன்பை வெளிப்படுத்தினார். அந்த சீன் எடுப்பதற்கு முதல் நாள் இரவு, சீன் பேப்பரை அனுப்பினார்கள். அதில், ‘பாத்துக்கோங்க சுடக்கூடாது’ என்றுதான் வசனம் இருந்தது. ஆனால் அடுத்த நாள் ஷூட்டிங்கின் போது, ‘துப்பாக்கிய புடிங்க சிவா’ என்று விஜய் சார் கூடுதலாக டயலாக்கை சேர்த்தார். அதை எல்லாரும் விஜய்யுடைய பொறுப்பை எனக்கு கொடுக்கிறார் என பேசினார்கள். அப்படி நான் பார்க்கவில்லை. அதையும் அவருடைய அன்பாகத் தான் பார்க்கிறேன். அப்படி பார்ப்பதுதான் சரி” என்றார்.