இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆகஸ்ட் 16 - 1947'. என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் ரேவதி ஷர்மா. புகழ், ரிச்சர்ட் ஆஷ்டன், ஜேசன் ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 7ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதால் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது சிவகார்த்திகேயன் பேசுகையில், "இப்படம் நமது சுதந்திரம் பற்றிய கதை. அது பற்றி சொல்லும் போது தனி மனிதனின் வாழ்க்கையிலே நிறைய வலிகள் வேதனைகள் இருக்கும். அடிமைப்பட்டு கிடந்த ஒரு நாடு பெரிய போராட்டம், நிறைய தியாகம் பண்ணியிருக்கும். இதையெல்லாம் சுவாரசியமாக எடுத்து இயக்குநர் கொடுத்துள்ளார். முதல் படமே இப்படிப்பட்ட கதையை எடுத்துள்ளார் என்று சொன்னால் அவர் வாழ்க்கையில் சவாலை சந்திக்க எப்போதும் தயாராக இருக்கிறார் என்று நினைக்கிறேன். சவாலை சந்திக்க தயாரானவன் தான் சாதிக்க தகுதியானவன் என்று சொல்லுவாங்க. அந்த வகையில் இயக்குநர் தகுதியானவர் தான். படம் இந்தளவுக்கு வந்ததற்கு முக்கிய காரணம் முருகதாஸ் சார். அவருக்கு இயக்குநர் கொடுக்கும் பரிசாக இப்படம் அமையும் என நம்புகிறேன். ஷான் ரோல்டன் இசை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. அவர் பேசும் போது ஒரு தொனியில் பேசுகிறார். பாடும் போது வேறொரு தொனியில் பாடுகிறார். அது மிகவும் நன்றாக இருக்கு.
நான் திரையில் நடிக்கும் போது பாதி ரஜினி சாரின் சாயல் இருக்கும். அவருடைய ஃபெர்பாமன்ஸ் வந்திரும். நம்முடைய வெற்றி நமது கரியரை வரையறுக்கும். ஆனால் நம்முடைய கேரக்டர் தான் நமது வாழ்க்கையை வரையறுக்கும். அந்த வகையில் கவுதம் கார்த்திக் ரொம்ப ஸ்வீட். கல்யாணம் எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை உருவாக்கும். அதற்கான ஆரம்பம் தான் கவுதம் கார்த்திக்கு இப்படம்." என்றார். மேலும் படக்குழுவினர் அனைவரையும் வாழ்த்தினார்.