சந்தோஷ் நாராயணன் இசையில் அவரது மகள் தீ மற்றும் ‘தெருக்குரல்’ அறிவு ஆகியோரின் குரலில் கடந்த ஆண்டு வெளியான ஆல்பம் பாடல் ‘என்ஜாய் எஞ்சாமி'. நிலமற்ற தேயிலை தோட்ட அடிமைகளாக இருந்து அவதிப்பட்ட வள்ளியம்மாள் உள்ளிட்ட சில மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் வெளியான இப்பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. வள்ளியம்மாள் ‘தெருக்குரல்’ அறிவின் பாட்டி என்பது குறிப்பிடத்தக்கது. சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ள மாஜா யூ-ட்யூப் தளத்தில் வெளியான இப்பாடல் பல இடங்களில் பல நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.
அந்த வகையில் சமீபத்தில் நடந்த சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ‘என்ஜாய் எஞ்சாமி' பாடலை தீ மற்றும் மாரியம்மாள் பாடியிருந்தார்கள். அப்போது இப்பாடலை எழுதி, அதில் நடித்திருந்த தெருக்குரல் அறிவு இடம்பெறவில்லை. இது தொடர்பாக பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்ப பின்பு அது சர்ச்சையானது. இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் வகையில் தெருக்குரல் அறிவு தற்போது தனது சமூக வலைதளபக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "இப்பாடலை எழுதி, இசையமைத்து, பாடியது நான். இதை எழுத யாரும் எனக்கு ஒரு டியூனையோ, மெலடியையோ அல்லது ஒரு வார்த்தையோ கொடுக்கவில்லை. கிட்டதட்ட 6 மாதங்களாக தூங்காமல், மன அழுத்தம் நிறைந்த இரவுகள் மற்றும் பகலுக்கு மத்தியில் நான் உழைத்திருக்கிறேன். இருப்பினும் இது அனைவரும் சேர்ந்து செய்த கூட்டு முயற்சிதான், அதில் சந்தேகமில்லை.
இப்பாடல் வள்ளியம்மாளின் சரித்திரமோ அல்லது நிலமற்ற தேயிலைத் தோட்ட அடிமை என் முன்னோர்களின் சரித்திரமோ அல்ல. மேலும் என்னுடைய ஒவ்வொரு பாடலும் இந்த தலைமுறையினரின் ஒடுக்குமுறை பற்றிய அடையாளமாக தான் இருக்கும். இது போல் இன்னும் இந்நாட்டில் 10,000 நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன. இப்பாடல் முன்னோர்களின் மூச்சு, வலி, வாழ்க்கை, அன்பு, மற்றும் எதிர்ப்பு பற்றிய அனைத்தையும் குறிக்கும் பாடல். இப்பாடலை இன்று அனைவரும் ஒரு அழகான பாடலாகப் பார்க்கிறார்கள். ஏனென்றால் பல தலைமுறைகளின் வியர்வையும் இரத்தமும் கலந்த வலியைக் கேட்கும் படி இனிமையான பாடலாக இப்பாடலை உருவாக்கியுள்ளோம். நம் மரபுகளைப் பாடல் வழியாக எடுத்துச் செல்கிறோம். நீங்கள் தூங்கும் போது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் கொள்ளையடிக்கலாம். ஆனால் நீங்கள் விழித்திருக்கும் போது முடியாது. ஜெய்பீம். முடிவில் உண்மைதான் எப்போதும் வெல்லும்" என குறிப்பிட்டுள்ளார்.
இதே போல் ஏற்கனவே 'Rolling Stone India' என்ற ஆங்கில புத்தகத்தில் ‘என்ஜாய் எஞ்சாமி' பாடலை பாராட்டும் வகையில் ஒரு செய்தி குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த செய்தியில் தெருக்குரல் அறிவின் பெயர் இடம்பெறவில்லை, இது அப்போது பெரும் பேசும்பொருளாக மாறியது குறிப்பிடத்தக்கது.