தேசிய ஊரடங்கு முடைவடைந்த பிறகும் ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், மல்டி ப்ளக்ஸ்கள் திறக்கப்படாது என்று சொல்லப்படுகிறது. இதனிடையே ரிலீஸுக்கு தயாரக இருக்கும் படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிட திட்டமிடப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக அமிதாப் நடித்திருக்கும் ‘குலாபோ சதாபோ’, ஜோதிகா நடித்திருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன. மேலும் பல படங்கள் வெளியாக இருப்பதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் இருந்து ஓ.டி.டி.யில் நேரடியாக வெளியாகும் முதல் படமாக அனுஷ்காவின் நிசப்தம் அமைந்துள்ளது.
ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சைலன்ஸ்’. இதில் அனுஷ்காவுடன் மாதவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருந்தது. தமிழில் இந்த படத்துக்கு ‘நிசப்தம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வசனமே இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ள, இந்த படத்தின் பணிகள் முடிவடைந்து ரிலீஸூக்கு தயாராக இருந்தது. கரோனா ஊரடங்கினால் இப்படத்தின் ரிலீஸ் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த படத்தின் வெளியீட்டை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் கோனா வெங்கட்டின் ட்வீட் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், “பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு நாங்கள் நிறைய கனவுகளோடு திரைத்துறைக்கு வந்துள்ளோம். எங்களுடைய வேலைகளுக்கு ஆடியன்ஸ் கொடுக்கும் வரவேற்பே எங்களுக்கு ஊக்கம் மற்றும் ஆக்ஸிஜன் ஆகும். அந்த உணர்வுக்கு ஈடே கிடையாது. சினிமா தியேட்டர்கள்தான் சினிமாவின் அர்த்தம். அதற்குதான் நான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.