கடந்த 14ஆம் தேதி ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு மாலை 3 மணிக்கு துணை ராணுவப்படையினர் பேருந்துகளில் சென்றுகொண்டிருந்தபோது, புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா நெடுஞ்சாலை பகுதியில் பேருந்து மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். 350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி வெடிக்கச் செய்தனர் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள். கடந்த 15 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலான இதில் 40 வீரர்கள் பலியாகியுள்ளனர். அதில் இருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என சி.ஆர்.பி.எப் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தூத்துக்குடியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரது உடல் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னுமொரு வீரர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.40 வீரர்களை பலி கொண்ட இந்த தாக்குதல் நாடு முழுவதும் மக்களிடம் பெரும் சோகத்தையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழக நடிகர் சித்தார்த் ட்விட்டரில்,“வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதை புல்வாமா தாக்குதல் சம்பவத்தைக் கொண்டு முடிவெடுப்பீர்கள் எனில், அது பயங்கரவாதத்திற்கு வாக்களிப்பதாகவே பொருள்!” என்று பதிவிட்டுள்ளார்.