
தயாரிப்பாளர் சசி காந்த் இயக்குநராக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘டெஸ்ட்’. இப்படத்தில் மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் மற்றும் சித்தார்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குவதோடு சசி காந்தே தயாரித்தும் உள்ளார். நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இப்படத்திற்கு சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார்.
கிரிக்கெட் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் ஏப்ரல் 4ஆம் தேதி நேரடியாக நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. நடிகர் மாதவன், “ஒரு கதாபாத்திரம் எடுத்து வந்தால் நல்லவராக இருந்தாலும் சரி வில்லனாக இருந்தாலும் சரி அதை எந்த அளவிற்கு சிறப்பாக செய்ய வேண்டும் என்பதில் தான் கவனமாக இருப்பேன் அப்படி இருக்கும் பொழுது இந்த கதாபாத்திரம் எனக்கு சவாலாக இருந்தது என்னுடைய பெஸ்ட் கொடுத்து இருக்கிறேன்” என்றார்.
நடிகர் சித்தார்த், “நம் நாட்டில் கிரிக்கெட் என்பது வாழ்க்கை. யாரைக் கேட்டாலும் கிரிக்கெட் பிடிக்கும் என்பார்கள். நானும் அதில் ஒருவன். தினமும் பல மணி நேரம் கிரிக்கெட் பலரும் பார்த்து, விளையாடி அந்த விளையாட்டுடன் பழக்கமாகி இருப்பார்கள். அதனால், கிரிக்கெட்டராக வெறுமனே நடித்து ஒப்பேத்த முடியாது. டெஸ்ட் கிரிக்கெட்டர் ரோல் நடிப்பது எளிது கிடையாது. நிறைய பேரிடம் இருந்து இன்ஸ்பையர் ஆகிதான் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கிரிக்கெட் பார்க்கும்போது வரும் பதட்டம் இந்தப் படம் பார்க்கும்போதும் உங்களுக்கு வந்தால் அதுவே எங்களுக்கு வெற்றிதான். எனக்கு கிரிக்கெட்டர் ராகுல் டிராவிட் பிடிக்கும். அவருக்கு என் கதாபாத்திரத்தை டெடிகேட் செய்ய விரும்புகிறேன்” என்றார்.