அருண்குமார் இயக்கத்தில் எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சித்தா'. கடந்த மாதம் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சினிமா விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் கன்னடத்தில் வெளியான போது படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சென்றிருந்த சித்தார்த்துக்கு காவிரி நதி நீர் பிரச்சனை காரணமாக கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். அது சர்ச்சையானதை தொடர்ந்து கன்னட மக்கள் சார்பாக நடிகர்கள் சிவராஜ்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டனர்.
இதனிடையே தெலுங்கிலும் அதே தேதியில் ரிலீஸாகவிருந்து சில காரணங்களால் ரிலீஸ் செய்யப்படவில்லை. இந்த நிலையில் சின்னா என்ற பெயரில் வருகிற 6ஆம் தேதி தெலுங்கில் வெளியாகிறது. இதற்காக ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்த நிலையில் அதில் பேசிய சித்தார்த் படம் தாமதமானதற்கான காரணத்தை பகிர்ந்திருந்தார். மேலும் ஒரு கட்டத்தில் எமோஷனலாக பேசி கண்கலங்கிவிட்டார்.
அவர் பேசியது, "இப்படம் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், 'சித்தார்த்தின் படங்களை யார் வந்து பார்ப்பார்கள்? என பலர் கேட்டனர். நான் நல்ல படம் பண்ணினால் மக்கள் பார்க்க வருவார்கள் என்று சொன்னேன். இதன் காரணத்தால் செப்டம்பர் 28 அன்று வெளியாகியிருந்த இப்படத்திற்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. சினிமா மீது நம்பிக்கை இருந்தால், சினிமாவை ரசிப்பவராக இருந்தால், தயவுசெய்து சின்னா படத்தை சென்று பாருங்கள். அதைப் பார்த்துவிட்டு, சித்தார்த்தின் படத்தைப் பார்க்க வேண்டாம் என்று உங்களுக்குத் தோன்றினால், இந்த மாதிரி பிரஸ் மீட் எதுவும் நடத்த மாட்டேன்" என கண்கலங்கிய படி பேசினார்.