![Shriya Saran about birds](http://image.nakkheeran.in/cdn/farfuture/Rsc8dzAl56PbTuWocHKYcYGW03amdTX3LFxDXYzNjos/1680679963/sites/default/files/inline-images/161_21.jpg)
தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமான ஸ்ரேயா, திருமணத்திற்கு பிறகு இந்தி மட்டும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான 'கப்ஸா' படம் மோசமான விமர்சனத்தை பெற்றது. இதைத் தொடர்ந்து 'மியூசிக் ஸ்கூல்' என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் படங்களில் பிசியாக இருக்கும் ஸ்ரேயா, அண்மையில் மும்பை அருகிலுள்ள அலிபாக் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அங்கு ஒரு பெரிய கூண்டுக்குள் பறவைகளை அடைத்து வைத்துள்ளதை வீடியோ எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த பதிவில், "நீங்கள் விலங்குகளை நேசிப்பவராக இருந்தால், விலங்குகளை சிறைப் பிடித்து வைக்கக் கூடாது என்பதாக புரிந்து கொள்ளுங்கள். பறவைகள் சுதந்திரமாக பறக்க வேண்டும். ஒரு சிறிய கூண்டில் இத்தனை பறவைகள்? நீங்கள் பொறுப்பாக இருக்க வேண்டாமா? இது சட்டப்பூர்வமானதா? பறவைகள் நாள் முழுவதும் ஒரு சிறிய கூண்டில் வைக்கப்பட்டுள்ளது. அவற்றை பார்த்து மக்கள் மகிழ்வார்களா." என அந்த ஓட்டல் நிறுவனத்தை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும் "அந்த பறவைகள் கூண்டை உடைத்து வெளியே பறக்க முயன்றது. அதை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது" என பதிவிட்டிருந்தார். இந்த பதிவின் கீழ், "அவை அனைத்தும் வெளிநாட்டுப் பறவைகள். இங்கு இருக்கும் சூழலில் விடுவித்தால், உயிர் வாழ முடியாது" என்று பலரும் கமெண்ட் செய்திருந்தார்கள். அந்த கமெண்டிற்கு பதிலளித்த ஸ்ரேயா, “சிறிய கூண்டுக்குள் பறவைகள் இருக்கிறது. அதை அவர்கள் பார்க்கவே விடுவதில்லை" என பதிவிட்டிருந்தார்.