
கராத்தே மாஸ்டர், வில்வித்தை வீரர், நடிகர் என பன்முக கலைஞராக வலம் வந்த ஷிஹான் ஹுசைனி ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சமீப காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்று நேற்று(25.03.2025) உயிரிழந்தார். அதற்கு முன் தனது உடலை தானம் செய்யவுள்ளதாக தெரிவித்து தனது இதயத்தை மட்டும் அவரது வில்வித்தை, கராத்தே மாணவர்களிடம் பாதுகாப்பதற்காக ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் இவரது உடல் அவரது சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு காஜிமார் தெருவில் உள்ள அவரது உறவினர் வீட்டில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. பின்பு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மதுரை அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தின் மூலம் ஷிஹான் ஹுசைனி நடிகராக அறிமுகமானார். இதையடுத்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார். விஜய் நடித்த பத்ரி படத்தில், விஜய்க்கு பயிற்சி கொடுக்கும் ஆசிரியராக நடித்து ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமடைந்தார். இதைத் தவிர்த்து 400க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்து, தமிழகத்தில் நவீன வில்வித்தைக்கு முன்னோடியாக இருந்துள்ளார். இதைத் தவிர்த்து ஏராளமான சாதனைகளை செய்துள்ளார்.