
கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி கே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து பல்வேறு படங்களில் நடித்து வந்தார். விஜய் நடித்த பத்ரி படத்தில், விஜய்க்கு பயிற்சி கொடுக்கும் ஆசிரியராக நடித்து ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமடைந்தார். இதைத் தவிர்த்து 400க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்து, தமிழகத்தில் நவீன வில்வித்தைக்கு முன்னோடியாக இருந்துள்ளார்.
இந்த சூழலில் சமீபகாலமாக தனது உடல்நிலை மோசமடைந்து வருவதாக ஊடகங்களின் பேட்டியின் மூலம் தெரிவித்திருந்தார். மேலும் தனக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாகவும் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தார். இது குறித்தும் வில் வித்தை பயிற்சியாளர்கள் குறித்தும் துணை முதல்வர் உதயநிதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதையடுத்து துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தலின்படி ஷிஹான் ஹுசைனிக்கு மருத்துவச் சிகிச்சை பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
உடல்நிலை தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் மீண்டு வருவேன் என்று நம்பிக்கையுடன் அவர் பேசியது பலரை கலங்கடிக்கச் செய்தது. இந்த நிலையில் ரத்த புற்றுநோயால் தீவிர சிகிச்சை பெற்று வரும் ஷிஹான் ஹுசைனி, தற்போது உடல் தானம் செய்வதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “மருத்துவம் மற்றும் உடற்கூறாய்வு ஆராய்ச்சிக்காக நான் இறந்த 3 நாட்களுக்குப் பிறகு ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு என் உடலை தானம் செய்ய விரும்புகிறேன். இந்தக் கல்லூரியின் நிறுவனர் ஸ்ரீ ராமசாமி எனது இந்திய கராத்தே சங்கத்தின் தலைவராக பல ஆண்டுகள் இருந்தார். மேலும் எனது ’ஸ்னேக் பைட் உலக சாதனைக்கு’(snake bite world record) தலைமை தாங்கினார்.
என் இதயத்தை மட்டும் பாதுகாப்பதற்காக, என் வில்வித்தை, கராத்தே மாணவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதைப் படிக்கும் எவரோ ஒருவர் ஸ்ரீ வெங்கடாசலம் அல்லது கல்லூரியின் எந்த அதிகாரியையும் தொடர்பு கொண்டு உடனடியாக எனது அதிகாரப்பூர்வ ஒப்புதலையும் எனது கையொப்பத்தையும் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.