சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள படம் 'பதான்'. இப்படத்தின் முதல் பாடலாக வெளியான 'பேஷரம் ரங்' பாடலில் தீபிகா படுகோனே கவர்ச்சியாக காவி நிற உடை அணிந்து நடனமாடியிருப்பதாக இந்துத்துவர்கள் விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சை எழுந்தது.
முன்னதாக படம் தொடர்பாக பாஜகவை சேர்ந்த பல தலைவர்கள் படத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அவர்களை திரைப்படங்கள் குறித்து யாரும் கருத்து கூற வேண்டாம் என பிரதமர் மோடி வலியுறுத்துவதாக ஒரு தகவல் வெளியானது. பின்பு படத்தை எதிர்த்த விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர், “பதான் படத்தில் செய்த மாற்றங்களால் மகிழ்ச்சியில் உள்ளோம். இதனால், போராட்டம் நடத்தும் முடிவை வாபஸ் பெறுகிறோம்” எனத் தெரிவித்திருந்தனர்.
இப்படி ஏகப்பட்ட சர்ச்சையை கிளப்பி எதிர்ப்பை சம்பாதித்த பதான் படம் ஒருவழியாக சொன்ன தேதியில் எந்த தடங்கலும் இன்றி வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. படத்திற்கு ஓரளவுக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் வசூலிலும் சக்கை போடு போட்டு வருகிறது. முதல் நாளிலே ரூ. 100 கோடி, அதற்கு அடுத்த நாள் ரூ. 100 கோடி என இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.219.6 கோடி வசூலித்துள்ளதாக அறிவிப்பு வெளியானது. நேற்றுடன் மூன்று நாட்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் மூன்றாவது நாள் வசூல் விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து வரும் நாட்களில் இன்னும் அதிகமாக வசூலிக்கும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு நாட்களில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதால் ஷாருக்கான் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். மேலும் துவண்டு கிடந்த பாலிவுட்டை ஷாருக்கான் தூக்கி நிறுத்தியது போல பாலிவுட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதற்கு காரணம் பாலிவுட்டில் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பிற்கு பிறகு பாய்காட் (#boycottbollywood) கலாச்சாரம் பெரிய அளவில் பேசப்பட்டு, பலரது படங்களை அது பாதித்தது. அமீர் கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், அக்ஷய்குமார் உள்ளிட்ட டாப் ஹீரோக்களின் படங்கள் பெரும் தோல்வியையும் நஷ்டத்தையும் சந்தித்தது.
இந்த பாய்காட் கலாச்சாரம் ஷாருக்கானின் பதான் படத்துக்கும் வர, படம் தோல்வியை சந்தித்து விடுமோ என்ற அச்சம் ஷாருக்கான் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் அதெற்கெல்லாம் குட்பாய் சொல்வது போல வசூலை வாரி குவித்து வருகிறது பதான். இதனால் கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் திரையுலகம் சரிவை நோக்கி சென்ற நிலையில் தற்போது பதான் படம் அதை சரி செய்துள்ளது போல் தெரிகிறது. தொடர்ந்து இது நிலைக்க வேண்டும் என்பதே தற்போது பாலிவுட் ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.