சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள படம் 'பதான்'. இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் முதல் பாடலாக வெளியான 'பேஷரம் ரங்' பாடலில் தீபிகா படுகோனே காவி நிறத்தில் கவர்ச்சியாக உடை அணிந்து நடனமாடி இருந்தது இந்துத்துவா ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டு சர்ச்சையானது.
இது தொடர்பாக பாஜகவை சேர்ந்த மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா பாடலில் உள்ள காட்சிகள் மற்றும் உடைகளை மாற்றுமாறு பதான் படத்தயாரிப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டார். அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பிரமான்ஸ் ஆச்சாரியா, “ஷாருக்கானை நான் நேரில் பார்த்தால் உயிரோடு அவரை எரித்து விடுவேன். இல்லை, வேறு யாராவது எரித்தால் அவருக்கு ஆதரவாக நீதிமன்றம் வரை சென்று ஆதரவு தெரிவிப்பேன்” என்று கூறினார். "ஷாருக்கானை நாட்டைவிட்டே வெளியேற்ற வேண்டும்" என்று பாஜக எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் எச்சரித்தார்.
இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், வருகிற 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் ஷாருக்கான் ரசிகர்கள் வெகு விமர்சையாக படத்தை வரவேற்கத் திட்டமிட்டுத் தயாராகி வருகின்றனர். 'ஷாருக்கான் யுனிவர்ஸ்' என்ற ரசிகர் மன்ற அமைப்பு முதல் நாள் முதல் காட்சியை 200 நகரங்களில் ஒரே நேரத்தில் 50 ஆயிரம் பேர் பார்க்க ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். மேலும், மும்பையில் மட்டும் 7 அல்லது 8 காட்சிகள் மற்றும் டெல்லியில் 6 காட்சிகள் திரையிடவுள்ளனர். முதல் நாள் முதல் காட்சியோடு நிறுத்திவிடாமல் தொடர்ந்து கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.
படத்திற்கு தொடர்ந்து பல பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில், அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஷாருக்கான் ரசிகர்கள் இது போன்ற ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழில் துணிவு மற்றும் வாரிசு படங்கள் வெளியாகி வெகு விமர்சையாக ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், ஒரு ரசிகர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இதையடுத்து தெலுங்கில் பாலகிருஷ்ணா ரசிகர்கள் 'வீர சிம்ஹா ரெட்டி' படத்தை கிடா வெட்டியும் திரையரங்கைத் தீப்பிடிக்க வைத்தும் கொண்டாடினர்.
கோலிவுட், டோலிவுட்டை தொடர்ந்து தற்போது பாலிவுட் ரசிகர்கள் தங்களது முன்னணி நடிகர்களின் படங்களின் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.