இராவண கோட்டம் திரைப்படத்தின் நடிகர் சாந்தனு உடன் ஒரு சிறப்பு நேர்காணல்.
ஒரு கட்டத்தில் கதைத் தேர்வு குறித்த மெச்சூரிட்டி அனைவருக்கும் வரும். அப்படி ஒரு நிலையில் என்னைத் தேடி வந்த கதை இது. இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். விக்ரம் சுகுமாரன் இயக்கிய 'மதயானைக் கூட்டம்' படம் எனக்கு மிகவும் பிடிக்கும். என்னை மக்களிடம் வித்தியாசமாகக் காட்ட வேண்டும் என்பதற்கான முயற்சி இது. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் கருவேல மரம் குறித்து நானும் நிறைய கற்றுக்கொண்டேன். கருவேல மரம் குறித்த விழிப்புணர்வு எங்கள் மூலம் மக்களுக்கு கிடைத்தால் மகிழ்ச்சி தான். எதிர்பார்ப்போடு சேர்த்து பயமும் வந்திருக்கிறது.
நான் பாக்யராஜின் மகன் என்பது எனக்கு ஒரு விசிட்டிங் கார்டு போலத்தான். என் குடும்பத்தினர் எப்போதும் எனக்கு நல்ல சப்போர்ட்டாக இருந்து வந்துள்ளனர். மக்கள் எப்போதுமே நல்ல படத்தை ஆதரிக்கின்றனர். சினிமா பின்னணி இருப்பவர்கள், இல்லாதவர்கள் என்று பலரும் இங்கு வெற்றி பெற்றுள்ளனர். அவர்களை உதாரணமாக வைத்துத் தான் என்னுடைய பயணம் தொடர்ந்து வருகிறது. வெற்றி தோல்வி குறித்து அப்பா எனக்கு நிறைய அட்வைஸ் செய்வார். வாய்ப்புகளுக்காக எப்போதும் காத்திருக்க வேண்டும். கிடைக்கும்போது சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்.
அதனால்தான் தோல்விகளைக் கடந்தும் என்னால் நம்பிக்கையோடு பயணிக்க முடிகிறது. விஜய் அண்ணா இருக்கும் உயரம் என்பது கத்தி மீது நடப்பது போன்றது தான். அனைத்தையும் நிதானமாக யோசித்து தான் செய்வார். யாரையும் புண்படுத்தமாட்டார். நிறைய போராடித்தான் இந்த இடத்துக்கு வந்துள்ளார். நிதானத்தையும், பொறுமையையும், நம்பிக்கையையும் அவரிடம் நான் கற்றுக்கொண்டேன்.