
சென்ற ஆண்டு 'சுச்சி லீக்ஸ்' என்ற பெயரில் பாடகி சுச்சித்ராவின் ட்விட்டரில் நடிகர், நடிகைகளின் ஆபாச வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகி திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு பின்னர் ஓய்ந்தது. இந்நிலையில் சமீபத்தில் இதே போல் தெலுங்கில் ‘ஸ்ரீ லீக்ஸ்’ என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அரைகுறையாக ஒருவரது முகம் வெளியாகி தெலுங்கு நடிகர்களை அதிர வைத்தது. மேலும் இதே போல் பட வாய்ப்பு கேட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து நாசம் செய்த பிரபலங்களின் பெயர்களையும் வெளியிடப்போவதாக தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஸ்ரீலீக்சில் பிரபல தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலு சிக்கி உள்ளார். இவர் நயன்தாரா நடித்த அனாமிகா என்ற படத்தையும், சாய்பல்லவி நடித்த பிடா என்ற தெலுங்கு படத்தையும் இயக்கி உள்ளார். இவரை மறைமுகமாக குற்றம் சாட்டி சமூக வலைத்தளத்தில் நடிகை ஸ்ரீரெட்டி பதிவிட்டுள்ளார். அதில்.... "அந்த இயக்குனர் பெண்கள் தன்னுடன் படுக்கைக்கு வர வேண்டும் என்று நினைப்பவர். அவருக்கு இரக்கம் இல்லை. ‘கொம்முலு வச்சின சேகருடு என்பதில் இருந்து அவரது பெயரை கண்டுபிடிக்கலாம். வீடியோ அழைப்பிலும் வருவார். நடிகைகளிடம் வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதில் வல்லவர். இளம் நடிகர்களிடம் பணம் வாங்கி நடிக்க வாய்ப்பு அளிக்கிறார்" என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக டைரக்டர் சேகர் கம்முலு தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை மறுத்து பதிவிட்டுள்ளார். அதில்.... "பெண்களுக்கு சம உரிமை மற்றும் அவர்கள் மேம்பாட்டுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். என்னுடன் பணியாற்றுபவர்களுக்கும் என்னை அறிந்தவர்களுக்கும் இது தெரியும். என்னை குற்றம் சாட்டியவர்களை சும்மா விடுவதாக இல்லை. என்னை பற்றி பதிவிட்ட கருத்தை நீக்கி விட்டு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பேன்" என காட்டமாக பதிவிட்டுள்ளார். இந்த இரு பதிவால் தெலுங்கு பட உலகில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.