முத்தையா முரளிதரனாக, விஜய் சேதுபதி நடிப்பதற்கு உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள், தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வந்தனர்.
இந்நிலையில், "தமிழ்நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. அதுமட்டுமில்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலை பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் எற்பட்டுவிடக் கூடாது என்பதையும் கருத்தில்கொண்டு இத்திரைப்படத்திலிருந்து விலகிக்கொள்ளுமாறு அவரை கேட்டுகொள்கிறேன்" என்று வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டார் முத்தையா முரளிதரன்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக ட்விட்டரில் விஜய் சேதுபதி அதைப் பகிர்ந்து, "நன்றி! வணக்கம்!" என்று பதிவிட்டிருந்தார். இதன்பின் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு, "நன்றி! வணக்கம்!" என்றால் 'எல்லாம் முடிந்துவிட்டது' என்பதுதான் பொருள் என்று விளக்கினார்.
இதனிடையே இயக்குனர் சீனு ராமசாமி விஜய் சேதுபதியின் இந்த முடிவிற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். அதில், “தனது ஹீரோ அந்தஸ்தை உயர்த்திக் காட்ட நினைக்காமல், எப்போதும் போல எளிமையாக நன்றி வணக்கம் என்று தன்னை நாடி வந்தவருக்கு விடை தந்து, தமிழ் மக்களின் அன்புக்கு அமைதி வழியில் மேன்மை செய்த 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதிக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.