Skip to main content

“பகத்சிங் கனவை நிறைவேற்றத் துடிக்கிற வெப் தொடர்” - சீமான் பாராட்டு

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
seeman praised cheran journey web series

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கம் பக்கம் திரும்பியுள்ள சேரன், ஜர்னி என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இதில் சரத்குமார், பிரசன்னா, ஆரி, கலையரசன், திவ்யபாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காம்பஸ் 8 பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். கடந்த 12 ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியான இந்த சீரிஸ் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதையடுத்து பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிக்கும் புதிய படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். சத்ய ஜோதி தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஜர்னி வெப் தொடருக்கு சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாமியைக் காப்பாற்ற இங்கே பெருங்கூட்டம் உள்ளது. ஆனால், வாழ்கிற பூமியைக் காப்பாற்ற ஒருவரும் இல்லை. மதத்தைத் தாண்டியது மனிதம் என்ற கருத்தைத் தம்பி கலையரசன் ஏற்றிருக்கும் அமீர் சுல்தான் கதாபாத்திரம் வெளிப்படுத்துகிறது. தகுதியிருந்தும் திறன் இருந்தும் உரிய இடத்தைத் தொட முடியாமல் ஒரு இளைஞன் இந்த சமூகத்தால் எவ்வளவு தூரம் புறக்கணிக்கப்பட்டுத் தத்தளிக்கிறான்? என்பதை அந்தக் கதாபாத்திரம் அழகாகச் சொல்கிறது.

நேர்த்தியான உரையாடல்களுடன், வலி தோய்ந்த வார்த்தைகளுடன் இருக்கும் காட்சிகளை எழுதுவதற்கு இன்றைக்கு சேரன் அளவுக்கு வேறு எவரும் இல்லை. வாழ்க்கையில் தவறு செய்யாதவர்கள் எவரும் இல்லை. ஆனால் தவறைத் திருத்திக் கொண்டு அதற்காக வருந்துவது மிகச்சிறந்த மனிதத்துவம். தவறு செய்வது மனித இயல்பு ஆனால், அதைத் திருத்திக் கொண்டு வாழ்வது ஆகப்பெரும் மாண்பு. செய்யாத தவறுக்காகத் தன்னைத் தானே மனச்சிறையிட்டு வருத்திக் கொள்வதை தம்பி கஸ்யாப் ஏற்றிருக்கும் நிதீஷ் என்கிற கதாபாத்திரம் வெளிப்படுத்துகிறது. 

எவ்வளவோ மாணவர்கள் படிக்க முடியாமல் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விடுகின்றனர்; கட்டணம் செலுத்த முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்து போகின்றனர். அதற்குக் காரணம், கல்வி வியாபாரமானதுதான். ஒரு நாட்டின் எதிர்காலமே அந்த நாட்டின் வகுப்பறையில்தான் தீர்மானிக்கப்படுகிறது. அந்தக் கல்வி கிடைக்காமல் எத்தனையோ பிள்ளைகள் அறிவுப் பசியோடு அலைகிறார்கள். வயிறு பசிப்பதைப் போல, மூளைக்கும் அறிவுப்பசி உண்டு. அதைக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது தம்பி பிரசன்னா நடித்திருக்கும் ராகவ் என்கிற கதாபாத்திரம். 

விடுதலை பெற்று 76 ஆண்டுகாலம் ஆகிவிட்டது. கல்விக்கு ஏங்காத மாணவனோ, வேலைக்கு அலையாத இளைஞனோ இல்லை என்கிற நிலை இன்னும் உருவாகவில்லை. இரவு உணவு இல்லாமல் இன்னும் கோடிக்கணக்கான பிள்ளைகள் உறங்கப் போகிறார்கள்: பாலுக்குக் குழந்தைகள் அழுது கொண்டுதான் இருக்கின்றன. பகத்சிங் கண்ட அந்தக் கனவு இன்னும் நிறைவேறாமல்தான் இருக்கிறது. அதை நிறைவேற்றத் துடிக்கிற எழுச்சிமிக்க சிந்தனை வளமிக்க தன்னலமற்ற ஒரு மனிதனின் கனவுதான் இந்த ‘Journey’ என்கிற தம்பி சேரனின் பயணம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்