லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ' படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 30 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இதையடுத்து திடீரென்று இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்தது. இதற்கு அரசியல் அழுத்தங்களோ அல்லது வேறு காரணங்களோ இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்பொழுது, "லியோ படத்திற்காக நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விஜய் அனுமதி கேட்கிறார். எத்தனையோ படங்களை அவர் அங்கு நடத்தியிருக்கிறார். இந்த முறை ஏன் தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை. கேட்டால் ஏ.ஆர். ரஹ்மானை கை காட்டுகிறீர்கள். அந்த நிகழ்ச்சியில் குளறுபடி ஏற்பட்டதற்கு ரஹ்மானுக்கு ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா. அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தது காவல்துறை. அவர்கள் நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பு ஆய்வு செய்ய வேண்டும். பிரச்சனை இருந்தால் வேறு இடத்தில் நடத்த அறிவுறுத்தியிருக்க வேண்டும். இல்லையென்றால் உரிய பாதுகாப்பு கொடுத்து நடத்தியிருக்க வேண்டும். அதுக்குத்தான் அரசு இருக்கிறது.
அதைவிட்டுவிட்டு நிகழ்ச்சி நடத்தவே கூடாது. எங்களால் பாதுகாப்பு கொடுக்க முடியாது. இப்படி சொல்வதற்கு எதற்கு அரசு, அவர்களுக்கு எதற்கு ஒரு காவல்துறை. நீ வீட்டைவிட்டு வெளியே வந்தால் செத்துப் போயிடுவ... கதவை பூட்டிவிட்டு உள்ளே படு... என்பதற்கு போலீஸ் தேவையில்லை. வெளியில் வா, சுதந்திரமா நடமாடு, உரிய பாதுகாப்பு நான் தருகிறேன் என்று சொல்வது தான் அரசும் காவல்துறையும். நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இவ்வளவு பேர் தான் கூட வேண்டும் என இத்தனை கட்டுப்பாடுகள் இருக்கிறது என்றால், நீங்க எல்லாம் மாநாடு நடத்தும் பொழுது லட்சக்கணக்கில் கூடுகிறார்களே அதற்கு யார் பாதுகாப்பு கொடுக்கிறார்கள். அமெரிக்காவிலிருந்து ஏதாவது ஸ்பெஷல் ஃபோர்ஸா வருகிறது.
ரஜினியின் ஜெயிலர் படத்திற்கு பாதுகாப்பு கொடுக்க முடிந்தது. விஜய் படத்திற்கு ஏன் கொடுக்க முடியவில்லை. நிகழ்ச்சியை ஏன் ரத்து பண்ண வைக்கிறீங்க. உரிய பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்றால் பகிரங்க மன்னிப்பு கேளுங்கள். அந்த கையாலாகாத்தனமும் இயலாமையையும் ஒத்துக்கங்க. இந்த செயல் ரொம்ப அருவருக்கத்தக்கது. வன்மையாக கண்டிக்கிறேன். அவர் அரசியலுக்கு வரப்போவதாக தெரிகிறது. அதனால் அவருக்கு நெருக்கடி கொடுக்கிறீங்க. எரிய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்ட நெருப்பை எவ்வளவு குப்பையை போட்டாலும் அணைக்க முடியாது" என்றார்.