இளையராஜா தனது பாடல்களுக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இது தொடர்பாக நடந்த விசரணையில், “பாடல் வரிகள், பாடகர்கள் என அனைத்தும் சேர்ந்துதான் பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும் போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்” என நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். இந்தச் சூழலில்தான், ஒரு இசை வெளியீட்டு விழாவில் பேசிய வைரமுத்து, “இசை எவ்வளவு பெரிதோ, மொழி அவ்வளவு பெரிது, மொழி எவ்வளவு பெரிதோ, இசை அவ்வளவு பெரிது. இதை புரிந்து கொள்பவன் ஞானி. புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி” என்றிருந்தார்.
இதையடுத்து இளையராஜாவின் தம்பியும் இயக்குநருமான கங்கை அமரன், “வைரமுத்து எங்களால் தூக்கிவிடப்பட்டவர். எங்களால் லிஃப்டில் ஏறி பாட்டு எழுதியவர். அவர் உட்கார்ந்த சேரை தூக்கிப் போட்டு மிதிப்பது போல பேசியிருக்கார். மனுஷனுக்கு எப்போதுமே ஒரு நன்றி வேண்டும்” எனக் குறிப்பிட்டு கடுமையாகக் கண்டித்திருந்தார். இதன் பிறகு இந்த விவகாரம் பெரிய சர்ச்சையாக மாறி தொடர்ந்து பேசு பொருளாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார். அமீரின் உயிர் தமிழுக்கு சிறப்பு காட்சியைப் பார்த்து விட்டு, செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், இசை பெரிதா மொழி பெரிதா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை என்று இருப்பது போலத்தான். இரண்டுமே முக்கியம்தான். வரிகள் இல்லாத இசையையும் ரசித்திருக்கிறோம். இசையில்லாத வரிகளையும் கவிதையாக படிக்கும் போதும் ரசிக்கிறோம். அப்போது இரண்டையும் ஏன் பிரிக்கனும். மொழி உடல் என்றால், உயிர் இசை. இரண்டு தகப்பன்களுக்குள் இருக்கும் மோதல்களில் பிள்ளைகளை உள்ளே இழுத்துவிடக் கூடாது. அது தீர்க்கப் பட வேண்டிய பிரச்சனை.
ஒரு படைப்பாளிக்கு, அவருடைய படைப்பிற்குரிய அங்கீகாரம் வேண்டும். தொலைக்காட்சியில் எங்கள் படத்தை ஒரு முறை ஒளிபரப்புவதற்குத்தான் காசு கொடுக்கிறாங்க. ஆனால் பல முறை ஒளிபரப்பு செய்கிறார்கள். அந்த உரிமையை வாழ்நாள் முழுக்க வைத்துகொள்கிறார்கள். முன்பெல்லாம் வானொலியில் ஒரு பாடலை ஒளிபரப்பினால் சம்மந்தபட்ட இசையமைப்பாளருக்கு ராயல்டி கொடுப்பாங்க. விழுக்காடு அடிப்படையில் தயாரிப்பாளர், படைப்பாளி என அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பதுதான் நியாயமான உரிமை. அந்த விதத்தில்தான் இளையராஜா கேட்கிறார். கவிஞர்களுக்கும் பாடகர்களுக்கும் கொடுக்க வேண்டாம் என அவர் சொல்லவில்லை. எனக்கு அதில் உரிமை இருக்கிறது. அதை கொடுங்கள் எனக் கேட்கிறார்” என்றார்.