சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று (28/02/2022) நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், கலந்து கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய சுயசரிதை நூலான 'உங்களில் ஒருவன்' புத்தகத்தை வெளியிட்டார். அதனை தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பெற்றுக் கொண்டார்.
இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், "நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களுக்காக சிங்கம் போல கர்ஜித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு நன்றி. திராவிட இயக்க வழக்கப்படி ராகுலை தம்பி என்றும், ஸ்டாலினை அண்ணா என்றும் அழைக்கிறேன். இங்கு அனைவரும் அண்ணா தம்பிகளே. கேரள முதல்வர் பினராயி விஜயன் என்பதை விட தோழர் பினராயி விஜயன் என்று அழைக்கலாம். நான் ஒரு நாலு வருஷத்துக்கு முன்னாடி கேரளா போயிருந்தேன். அப்போ எங்க முதல்வர் பினராயி விஜயனை பற்றி என்ன நினைக்கிறீங்க என்று கேட்டார்கள். அதுக்கு நான் எங்களுக்கு இந்த மாதிரி முதல்வர் கிடைக்கலையேன்னு ரொம்ப ஆதங்கமா இருக்குன்னு சொன்னேன். அதுக்கு எல்லாரும் பாராட்டினாலும், சிலர் அப்படியா எனக் கேட்டு வேணும்னா பினராயி விஜயனை உங்க தமிழ் நாட்டுக்கு அழைச்சிட்டு போங்களேன்னு சொன்னார்கள். இவரை நாங்க தமிழ் நாட்டுக்கு கூப்டுட்டு போய்ட்டா இத விட சிறந்த முதல்வர் உங்களுக்கு கிடைக்க மாட்டாரே, என்ன பண்ணுவீங்க. ஆனா இப்போ எங்களுக்கு தேவையில்லை அதான் எங்க தளபதி இருக்காரே.யாரு சிறந்த முதல்வருன்றதுல போட்டி போடுற அளவுக்கு சிறந்த முதல்வர் நமக்கு அமைந்திருக்கிறதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். தளபதி ஸ்டாலின் வந்து என்கிட்டே 'உங்களில் ஒருவன்' புத்தகத்தை கொடுத்து படிக்க சொன்னாரு. பொதுவா நான் கொஞ்சம் படிக்கமே ஓப்பி அடிச்சுருவேன். ஆனால் இந்த புத்தகத்தின் முதல் பக்கத்தை படிச்சா உடனே அவ்வளவு இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. சரி விழாவுக்கு இந்திய ஒன்றியத்திலிருந்து பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் வராங்க நாம ஒழுங்கா பேசணும்னு குறிப்பு எழுத ஆரம்பிச்சா பக்கம் பக்கமா போய்கிட்டே இருக்கு... அதனால் என்னுடைய ஆர்வத்தின் காரணமாக பேசிட்டே இருந்தேன்ன யாராவது சட்டையை புடிச்சி இழுத்து நிப்பாட்டிடுங்க" என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், " ஓப்பனிங்ல ஒன்னு சொன்னாரு பாருங்க, முத்துவேல் கருணாநிதி ஆகிய நான் என்று கூறியதற்கு அங்கு தலைவர் கலைஞர் முகம் தெரிந்ததுன்னு சொன்னாரே, அது எவ்வளவு டச்சிங்கான நிகழ்வு. அப்படி ஒரு தலைவர் அமையவே மாட்டாரு. குறிப்பிட்ட வயது வரைக்கும் பிள்ளைகள் அப்பாவை கரெட்டா நினைப்பாங்க. அப்புறம் ஒரு குறிப்பிட்ட வயசு வரைக்கும் நம்ம அப்பா இப்படி பண்ணிருக்கலாம் அப்படி பண்ணிருக்கலாம்ன்னு சொல்லி குற்றம் சொல்ல ஆரம்பிச்சுருவாங்க. ஆனால் கடைசி வரைக்கும் முதல்வர் ஸ்டாலினின் தந்தை ஒரு தலைவனாகவே இருந்திருக்கிறார். தந்தை ஒரு தலைவன். படத்துக்கு பெயர் நல்லாருக்குள்ள.? அப்புறம் இந்த புத்தகத்தில் இனிமையான நிகழ்வுகளை எழுதிருயிக்கிறார். முதலில் கலைஞர் பெரியார் பெயரையும், அண்ணா பெயரையும் சேர்த்து அய்யாத்துரைன்னு பெயர் வைக்கலாம்னு இருந்திருக்கிறார். ஆனா அவர் பொறந்தப்போ ரஷ்யாவில் ஸ்டாலின் தலைமையில் புரட்சி நடந்த வேளையில் தன் மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் வச்சிருக்காங்க. ஸ்டாலின் பிறந்த போதும் கலைஞர் சிறையில் இருந்தார். தனது பேரன் உதயநிதி பிறந்த போதும் கலைஞர் சிறையில் இருந்தார். இப்படி ஒரு தலைவன் எங்க கிடைப்பார் சொல்லுங்க. அப்புறம் டால்மியா புறம் போராட்டத்தைப் பற்றி சொல்லிருக்காரு பாருங்க, அந்த போராட்டத்தில் கலைஞர் தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்திருக்கிறார், அப்போது ரயில் உங்கள் மீது ஏறினால் என்ன நடக்கும் தெரியுமா என போலீசார் கேட்க, ரயில் எங்கள் மீது ஏறினால் உடையும் எலும்பு சத்தம் டெல்லிக்கு கேட்கும்ன்னு கலைஞர் சொல்றாரு. என்ன தைரியம் பாருங்க கலைஞருக்கு. வாழ்க்கையிலே ரியல் ஹீரோன்னா அது கலைஞர் தான். 6 மாதம் கடுங்காவல் என்று கவலைப்படாமல். சிறைக்கு சென்றும் பகுத்தறிவை பரப்பி இருக்கிறார். அவருக்கு சிறைச்சாலையும், ஒண்ணுதான் சட்டசபையும் ஒண்ணுதான். இந்த உங்களில் ஒருவன் புத்தகத்தை படிக்கும் போது சகோதரர் ஸ்டாலின் அவர் வரலாறு எழுதுறாரா இல்ல தலைவர் கலைஞர் வரலாறு எழுதுகிறாரா என்று சந்தேகம் வரும் அளவுக்கு கலைஞர் பற்றியே எழுத்திருக்கிறார். அப்புறம் ஒரு இடத்துல எழுதி இருக்கார் பாருங்க அஞ்சுகம் அம்மையாருக்கு ஸ்டாலின்னு வராதாம், தாலின்னு தான் வருமா... அதனால் தான் அவர் ஸ்டாலினை தாலின்னு தான் அழைப்பாராம்... இது எல்லாம் படிக்கும் போது இறுக்கமா இல்லாம.. ரொம்ப கலகலப்பா சிரிக்க முடியுது. உணர்ச்சிவசப் பட முடியுது, ரசிக்க முடியுது. அப்புறம் இந்த புத்தகத்தில் திருக்குவளை வீடு ரத்தத்திலும், உணர்வாலும் கட்டப்பட்டுள்ளது என எழுத்தியிருக்கிறார்கள். நிச்சயமாக நான் அந்த பக்கம் போகும் பொழுது அந்த வீட்டை பாக்கணும்னு ஆசைப்படுறேன்
'உங்களில் ஒருவன்' புத்தகத்தில் அவரது தாத்தா முத்துவேல் குறித்து கூறியுள்ளார். புலவர், பாடுவார், வைத்தியம், விவசாயம் தெரியும், கூடவே சமஸ்கிருதம் தெரியும் என சொல்லிருக்காங்க. பேசாம அவர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து மருத்துவர் ஆகியிருக்கலாம். முன்னெல்லாம் மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தெரிஞ்சிருக்கும்ன்னு சொன்னாங்க ஏன்னா நாமெல்லாம் மருத்துவரா ஆக கூடாதுல்ல அதுக்குத்தான். அதை ஒடைச்சது நீதிக்கட்சி தான். அவங்க ஆட்சிக்கு வந்த பிறகு தான் மருத்துவத்துக்கு சமஸ்கிருதம் தேவையில்லைன்னு சொல்லி அதை செய்து காட்டினார்கள். ரஷ்ய ஸ்டாலினும் இவரும் ஒண்ணுதான். இருவர்களது ஆட்சிக்காலத்திலும் மதம் நீக்கப்பட்டுள்ளது. அவரை போன்று இவரும் இரும்பு மனிதர். அப்புறம் ஒரு இடத்துல எழுதி இருக்காரு பாருங்க தன்னுடைய ஸ்டாலின் பேருக்கு பள்ளியில் இடம் கிடைக்கலன்னு எழுதியிருக்கிறார். அதுக்குன்னு பெயரையா மாற்ற முடியும், பள்ளியையே மாற்றியிருக்கிறார் ஸ்டாலின். நான் ஒரு எம் ஜி ஆர் ரசிகன். ஸ்டாலின் எம்,ஜி ஆருடன் 25 நாட்கள் சேர்த்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். எனக்கு தெரிஞ்சு ஜெயலலிதா மேடம் சரோஜாதேவி மேடம் கூட 25 நாள் எம்ஜிஆருடன் சேர்ந்து சுத்திருக்க மாட்டாங்க. ஏன் சொல்றேன்னா அப்போ எல்லாரும் ஷூட்டிங்ல பிசியா இருந்தாங்க. அநேகமாக அவரது கதாநாயகிகளை விட எம் ஜி ஆருடன் சேர்ந்து அதிக நாள் இருந்தது ஸ்டாலின்னு தான் நினைக்கிறேன்" என்றார்.
இதையடுத்து பெண் பார்க்க போனது பற்றி ஸ்டாலின் தனது புத்தகத்தில் எழுதியுள்ளதை பற்றி குறிப்பிட்ட சத்யராஜ் சிரித்துக்கொண்டே, பொண்ணு பார்க்க போன போது மாப்பிள்ளை என்ன வேலை பார்க்கறாங்க என்று கேட்டாங்களாமே என்று மேடை எதிரே அமர்ந்திருந்த துர்கா ஸ்டாலினிடம் கேட்க, அவரும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் சிரிக்க ஆரம்பித்தனர்.
இப்புத்தகத்தில் மிசாவில் ஸ்டாலினை கைது செய்த போது ஒரு தலைவனாக கலைஞர் பேசியதை குறிப்பிட்ட சத்யராஜ், திமுக தொண்டன் வீட்டுப்பிள்ளைகள் சிறை செல்வது போல் ஸ்டாலினும் சிறை செல்கிறார் எனக் கலைஞர் கூறி நெகிழ்ச்சி அடைந்தார். மிசாவைப்பற்றி மட்டுமே தனி சினிமாவாக எடுக்கலாம் என்றும் சொன்னார் சத்யராஜ். 2வது பாகம் வந்த உடன் படம் எடுக்க ஆசைப்படுகிறேன் எனக் கூறி தனது உரையை முடித்தார்.