தீரன் இயக்கத்தில் சத்யராஜ், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’. இப்படத்தை சலீம் தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (15.12.2021) மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் நக்கீரன் ஆசிரியர், நீதிபதி சந்துரு, இயக்குநர் எஸ்.ஏ.சி. உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், பாரதிராஜா இயக்கிய ‘வேதம் புதிது’ படத்திற்கு சென்சார் பிரச்சனை ஏற்பட்டபோது அப்போதய முதல்வர் எம்.ஜி.ஆர். உதவியது குறித்து கூறுகையில், "பாரதிராஜா இயக்கிய ‘வேதம் புதிது’ படத்தில் நான்தான் நடித்திருந்தேன். படத்தைப் பார்த்துவிட்டு சென்சாரில் காட்சிகளை எல்லாம் நீக்கச் சொல்லவில்லை. படத்தையே வெளியிட முடியாது என்றுவிட்டனர். அப்போது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தார். இந்த விஷயம் தெரிந்து அவரே பாரதிராஜாவை தொடர்புகொண்டு, ‘உங்கள் படத்திற்கு ஏதோ பிரச்சனையாமே... நான் படம் பார்க்க வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்’ என்று கூறினார். ஏ.வி.எம். தியேட்டரில் அன்று மாலையே எம்.ஜி.ஆருக்கு திரையிட்டுக் காட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் பக்கத்திலேயே என்னையும் உட்காரவைத்து முழு படமும் பார்த்தார்.
படம் ஆரம்பித்தவுடன் லைட்டை அணைத்துவிட்டனர். உடனே கால் மீது கால்போட்டு உட்கார்ந்துகொண்டார். இடைவேளை வரும்போது லைட் ஆன் செய்தவுடன் கால் மீது கால் போட்டிருந்ததை எடுத்துவிட்டார். இடைவேளை வந்தவுடன் ‘என்ன சாப்பிடுறீங்க’ என்றேன். ‘அதெல்லாம் ஏதும் வேண்டாம்’ என்றார். ‘பரவாயில்லை சொல்லுங்கணே’ என்றேன். காபி, டீ, பலகாரம் என அவரே வீட்டிலிருந்து அனைவருக்கும் கொண்டுவந்துவிட்டார். ‘உங்களை நாங்கள் கவனிக்கலாம்ணு பார்த்தா, நீங்க எங்களைக் கவனிக்கிறீங்களேண்ணே’ என்றேன். பின், இடைவேளை முடிந்து மீண்டும் லைட் ஆஃப் செய்தவுடன் கால் மீது கால் போட்டுக்கொண்டார். அப்போது எனக்கு அதற்கான காரணமெல்லாம் தெரியவில்லை.
எம்.ஜி.ஆர். இறந்த பிறகு அவருக்கு நடைபெற்ற இரங்கல் கூட்டம் ஒன்றில் மாபெரும் நகைச்சுவை நடிகர் கே.ஏ. தங்கவேலு சார் பேசுகையில், ‘எம்.ஜி.ஆர். அண்ணன் வெளியே எங்கேயாவது கால் மீது கால் போட்டு உட்கார்ந்து பார்த்திருக்கீங்களா’ என்றார். இதுவரை அப்படி எந்த ஃபோட்டோவும் இல்லை. அப்போதுதான் அவருடைய அடக்கம் எனக்குப் புரிந்தது. படம் பார்க்கும்போது அவர் கால் மீது கால் போட்டிருந்ததை நான் பார்த்தால் மட்டும்தான் உண்டு. ஆனால், அந்த ஒருத்தரிடமும் நாம் திமிராக நடந்துகொள்ளக் கூடாது என்பதற்காக விளக்கை ஆன் செய்தவுடன் கால் மீது கால் போட்டிருந்ததை எடுத்துவிட்டார்.
அன்று படத்தைப் பார்த்துவிட்டு, என் கையைப் பிடித்து முத்தம் கொடுத்தார். பாரதிராஜா சாரும் அதற்குள் வந்துவிட்டார். அவரிடம், ‘நீ ரீலிஸ் தேதியை அறிவித்திடு... படம் ரிலீஸாகும்’ எனக் கூறிவிட்டு கிளம்பிச் சென்றார்.