
முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகச் சென்னை தி.மு.க. சார்பில் ‘மக்கள் முதல்வரின் மனிதநேய விழா’ என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இதில் திரை பிரபலங்களும் கலந்து கொண்டு முதல்வர் குறித்து பேசி வருகின்றனர். கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற நிகழ்வின் போது வடிவேலு கலந்து கொண்டு பேசினார்.
இந்த நிலையில் ‘மக்கள் முதல்வரின் மனிதநேய விழா’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ‘சூரிய மகள் 2025’ என்ற தலைப்பில் மகளிருக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோருடன் நடிகர்கள் சத்யராஜ் மற்றும் பிரபு ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது சத்யராஜ் பேசுகையில், “இந்த விருதின் வடிவமைப்பில் சூரிய மகள் கையில் புத்தகம் இருக்கிறது. பெண் விடுதலை வேண்டுமென்றால் அவர்களின் கையில் இருக்கும் கரண்டியை பிடிங்கி விட்டு புத்தகத்தைக் கொடுங்கள் என்று பெரியார் சொன்னார். அதை இங்கு அழகாக பண்ணியிருக்கிறார்கள்” என்றார்.
தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசுகையில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றால் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் சொல்லலாம். அதோடு முதுகெலும்புள்ள களப்போராளி ஸ்டாலின் என்றும் சொல்லலாம். ஏனென்றால் அவருடைய முதுகெலும்பு வெறும் எலும்புகளால் ஆனவை அல்ல. எமெர்ஜென்சி காலத்தில் மிசாவில் சிறைக்குச் சென்று போலீஸின் கொடுமைகளுக்கு ஆளானதால் அவரின் எலும்பு கொஞ்சம் பலவீனமாகத்தான் இருக்கும். ஆனால் அவரின் எலும்புகள் பெரியாரின் கொள்கைகளாலும் அண்ணாவின் எதையும் தாங்கும் இதயத்தாலும் கலைஞரின் நெஞ்சுக்கு நீதியாலும் உருவானவை. அது வயது ஆக ஆக வலுப்பெற்றுக் கொண்டேதான் இருக்கும்” என்றார்.
மேலும் அமைச்சர் சேகர் பாபு குறித்து பேசிய அவர், “அமைச்சர் சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சர் மட்டும் இல்லை. அறநிலையத் துறைக்கே அரணாக இருப்பவர். அதனால் தான் ஆன்மீகம் என்ற பெயரில் ஆட்டையப்போட நினைப்பவர்கள் இந்த அரணை பார்த்து மிரண்டு ஓடுகிறார்கள். அவர் அமைச்சர் என்பதை தாண்டி ஒரு பாதுகாவலர்” என்றார்.