நாளைய இயக்குனர் குறும்பட போட்டியில் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கியுள்ள படம் 'தீதும் நன்றும்'. இந்தப்படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராகவும் நடித்துள்ளார் ராசு ரஞ்சித், மற்ற இரண்டு ஹீரோக்களாக சந்தீப் ராஜ், ஈசன் ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்க இன்னொரு முக்கிய வேடத்தில் கேரளாவை சேர்ந்த லிஜிமோல் ஜோஸ் என்பவர் நடித்துள்ளார். 'எங்கேயும் எபோதும்', 'நெடுஞ்சாலை', 'தீயா வேலை செய்யனும் குமாரு','இவன் வேற மாதிரி' புகழ் சி.சத்யா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் இசையமைப்பாளர் சி.சத்யா 'தீதும் நன்றும்' படம் குறித்த அனுபவங்களை பற்றி பேசுகையில்.... "பொதுவாக நாளைய இயக்குனர் மாதிரி டீம் எல்லாம் புது டெக்னீஷியன்களா தான் ஒரு கூட்டணி அமைப்பாங்க. இப்படத்தோட இயக்குனர் ராசு ரஞ்சித் என்கிட்ட வந்து, இது சின்ன பட்ஜெட் படம். இந்தப்படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொள்வீர்களா என கேட்டபோது, இந்த சந்தேகத்தை வாய்விட்டே கேட்டுவிட்டேன். அதற்கு அவர் இந்தப்படத்தின் கதை கொஞ்சம் அழுத்தமான, ஆழமான கதை. அதனால் உங்களை தேடிவந்தோம் என கூறினார். எனக்கும் புது ஆட்களுடன் பணிபுரிய வேண்டும் என்கிற எண்ணம் கொஞ்ச நாட்களாகவே இருந்துவந்தது.
கதையும் எனக்கு பிடித்திருந்தது. அவர்கள் எதிர்பார்ப்பை ஓரளவு ஈடுசெய்துள்ளதாகவே நினைக்கிறேன். இயக்குனர் ராசு ரஞ்சித்தின் பாடல்கள் குறித்த ஆர்வம் எனனை ஆச்சரியப்படுத்தியது. பாடல்கள் கமர்ஷியலாகவும் அதே சமயம் க்ளாஸாகவும் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இந்தப்படத்தில் 'பட்டு ரோசா'ன்னு ஒரு பாடல் மெலடியுடன் கூடிய குத்துப்பாட்டாக உருவாகியுள்ளது. அழகான வரிகளை கொடுத்துள்ளார் பாடலாசிரியர் முத்தமிழ்.. மற்ற பாடல்களும் கதைக்கு தேவையான இடத்தில் தான் அமைந்திருக்கிறது. பாடல்கள் தேவையா என சிலர் கேட்கிறார்கள். பாடல்கள் தான் ஒரு படத்தோட முகவரியே. அதனால் தான் படம் ரிலீஸாவதற்கு முன்பாக அவற்றை யூடியூப்பில் வெளியிட்டு ரசிகர்களுக்கு படத்தை பற்றிய ஒரு புரிதலை உருவாக்கி, அவர்களை தியேட்டருக்கு அழைத்து வரும் வேலையை எளிதாக்குகிறது. படம் பார்க்கும் ரசிகர்கர்களுக்கு ரிலாக்ஸ் தருவதும் அதுதான். சில பாடல்கள் கதையை மீறி படத்திற்குள் திணிக்கப்படும்போது, ரசிகர்களுக்கு போரடிப்பது தவிர்க்க முடியாதுதான். எதிர்காலத்தில் பாடல்களை மட்டும் யூடியூப்பில் வெளியிட்டுவிட்டு, படத்தில் அவற்றை கட் பண்ணிவிடுகின்ற நிலை கூட வரலாமோ என்னவோ..?" என ஒரு புதிருடன் முடித்தார் இசையமைப்பாளர் சி.சத்யா.