மன்மதலீலை படத்தை தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன் சுமந்த ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ஹாஸ்டெல் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், சதீஷ், கிரிஷ் குமார், முனிஸ்காந்த், ரவி மரியா, விஜய் டிவி யோகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர்.
இப்படம் குறித்து சதீஸ் பேசுகையில், "ரொம்ப ஜாலியா வேலை பார்த்த படம். எல்லோரும் வாழ்க்கையில் அனுபவித்த கதைதான். நான் ஹாஸ்டலில் படித்ததில்லை ஆனால் நண்பன் ஹாஸ்டல் போய் தங்கியிருக்கிறேன். அந்த நினைவுகளை இந்தப் படம் தூண்டிவிடும். அசோக் செல்வன் நடித்த ஒரு படம் சமீபத்தில்தான் வெளியானது. இப்போ அடுத்த படத்தோடு வந்து விட்டார். அவர் மூன்று நாயகிகளோடு நெருக்கமாக நடிப்பதை பார்க்க பொறாமையாக இருக்கிறது. பிரியா நெருங்கிய தோழியாக மாறிவிட்டார். நாசர் சார் மகளிர் மட்டும் படத்திற்கு பிறகு நல்ல காமெடியோடு நடித்துள்ளார். சுமந்த் முன்னதாகவே எனக்கு நண்பர். படத்தை நன்றாக எடுத்துள்ளார். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் இயக்குநர் சுமந்த ராமகிருஷ்ணன் பேசுகையில், "எனது முந்தைய படத்திற்கு நல்ல ஆதரவை தந்தீர்கள். இப்போது ஒரு பெரிய டீமுடன் வந்துள்ளேன். தயாரிப்பாளர் ரவி சாருக்கு நன்றி. அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், சதீஷ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் எங்களுக்கு பிடித்துள்ளது, இது ஒரு சிம்பிளான படம் உங்களுக்கும் பிடிக்கும். ஆதரவு தாருங்கள் நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.