லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் சிவா அரவிந்த் இயக்கத்தில் 'சரவணன் மீனாட்சி' கவின், ரம்யா நம்பீசன், அருண் ராஜா காமராஜ், ராஜு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் படம் 'நட்புனா என்னானு தெரியுமா'. இந்தத் திரைப்படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் வெளிவராமல் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. சமீபத்தில், அக்டோபர் 12ஆம் தேதி வெளியீடு என விளம்பரம் செய்யப்பட்டிருந்த இந்தத் திரைப்படம், தற்போதும் வெளிவரவில்லை எனும் அர்த்தத்துடன் படத்தின் நாயகன் கவின், தன் ஃபேஸ்புக் பக்கத்தில் உருக்கமாக ஒரு ஸ்டேட்டஸை பதிவேற்றியிருக்கிறார். அதில்,
"இந்த விஷயத்தை இனியும் எப்படி கையாள்வதுன்னு எனக்குத் தெரியல. நான், கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் நம்மை நாம் நினைக்கும் இலக்குக்கு அழைத்துச் செல்லும் என்று நம்புபவன். ஆனால், அதையும் தாண்டி வெற்றிக்கிடையில் பல விஷயங்கள் இருக்கின்றன என இப்போதுதான் தெரிந்துகொள்கிறேன். ஒவ்வொரு முறையும் படம் வெளியாகப்போகிறதென்ற நம்பிக்கை கொடுத்து அது பொய்யாகும்போது நண்பர்களுக்கு எவ்வளவு தாழ்வு என்பது எனக்குப் புரிகிறது. ஆனால், நாங்கள் எங்களுக்கு இருந்த நம்பிக்கையையும் அந்த நம்பிக்கை கொடுக்கும் சந்தோஷத்தையும் பகிர்ந்துக்கிட்டோம். ஆனால், இப்படி பிரச்சனைகள் நடக்கும்போது நடிகர்கள் கையில் எதுவுமே இல்லை.
சிலர் எங்களை கிண்டல் செய்கின்றனர். 'ஒவ்வொரு தடவையும் விளம்பரம் மட்டும்தான் வருது, படம் வரமாட்டேங்குது'னு சொல்றாங்க. யாருமே ஒரு படத்தை எடுத்து அவர்களே வைத்துக்கொள்ள தயாரிக்க மாட்டார்கள். ஒரு டீமாக எங்களால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனா, ஒரு படத்தை ரிலீஸ் செய்வதில் அதைத் தாண்டிய பெரிய பிரச்சனைகள், வலிகள் இருக்கு என்பதை இப்போதுதான் தெரிந்துகொள்கிறேன். ஆனாலும், அந்த வலியை என்னால் முழுசா உணர முடியாது. அதனால், இனியும் பொய்யான நம்பிக்கையை கொடுக்கமாட்டேன்.
படம் என்றாவது ஒரு நாள் வெளியாகும். உங்களுக்குப் பிடித்திருந்தால் அதை திரையரங்கில் சென்று பாருங்க. உங்களோட நானும் அதை கூட்டத்தில் ஒருத்தனா இருந்து பார்ப்பேன். எனக்கு மக்களை மகிழ்விப்பது ரொம்பப் பிடிக்கும். அதனால்தான் இந்தத் துறைக்கு வந்தேன். ஒவ்வொரு கலைஞனும் தன் கலையை நிகழ்த்தி மக்களை மகிழ்விப்பதை விரும்புவான். அதிலிருந்துதான் அவனது வாழ்க்கையே நடக்கும். நானும் அப்படித்தான். இந்தப் படத்தில் ஒரு நடிகனுக்கும் மேலாகத்தான் நான் பணியாற்றினேன். இந்தப் படம் பல பிரச்சனைகளை சந்திக்கிறது. பரவாயில்லை, நான் தொடர்ந்து ஒரு கலைஞனாக செயல்படுவேன், அதை செய்துகொண்டே உயிர்விடுவேன். உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.