கமல்ஹாசனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் சரவண ராஜேந்திரன். இவரது இயக்கத்தில்‘மெஹந்தி சர்க்கஸ்’படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. சமீபத்தில் சரவண ராஜேந்திரன் கொடுத்த பேட்டியில் கமல் குறித்த சுவாரசியமான அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர்...
வீட்டில் நான் சினிமாவுக்கு போறேன்னு சொன்னால் விட மாட்டாங்க, அதனால் படிக்க போறேன்னு சொல்லிட்டு சென்னைக்கு வந்து பச்சையப்பாஸ் காலேஜில் அட்மிஷன் போட்டுட்டு, காலேஜ் போகாமல் சினிமா வாய்ப்புத் தேடி சுற்றினேன். அப்போ மாநில அளவில் ஒரு பேச்சுப் போட்டி நடந்தது. அதற்கு கமல் தான் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவருக்கு என் பேச்சு ரொம்போ பிடித்திருந்தது, பாராட்டினார். அதேபோல்,அப்போதிருந்த கமல் ரசிகர்மன்ற தலைவர் குணசீலனுடன் எனக்கு நல்ல நெருக்கம் இருந்தது. மேலும், என் நண்பன் அசோக், கமலிடம் வேலைக்குச் சேர்ந்திருந்தார். அதன்பிறகு கமலின் பிறந்தநாள் விழா காமராஜ் அரங்கத்தில் நடந்தது. அதில் நாங்கள் மைம் நிகழ்ச்சி ஒன்று நடத்தினோம். அதற்கு ஜேம்ஸ் வசந்த் தான் மியூசிக் போட்டார். முழுசா ஐந்து நிமிட மைம் அது. முடிந்ததும் நல்ல க்ளாப்ஸ் இருந்துச்சு. 2 நாள் கழித்து கமல் எங்களை வரச்சொல்லியிருந்தார்.
நாங்கள் அங்கே போனதும் கமல் “மைம் அப்டிங்குறது...”என்று பேச ஆரம்பித்தார். நமக்கு மைம் பண்ணத்தெரியும் ஆனால், அதோட வரலாறுலாம் தெரியாது. அவர் மைம் எங்க தோன்றுனுச்சு, எப்டி வளந்துச்சுன்னுலாம் பேசும் போது பயங்கரமா இருந்துச்சு. பேசி முடிச்சுட்டு “உங்களில் ஒருத்தரை நான் செலெக்ட் பண்ணுறேன், மைம் தான் வாழ்க்கையினு முடிவு பண்றவுங்க கைத்தூக்குங்க, அவங்களை நான் ஃபிரான்ஸுக்கு அனுப்புறேன், அங்கப்போய் இன்னும் கத்துக்கோங்க”அப்படினு சொன்னாரு. ஆனால், ஒருத்தனும் கையத்தூக்கல, அப்படியே என்னப் பார்த்தாரு, ஏன்னா, நானும் அசோக்கும் தான் அந்த மைம் நிகழ்ச்சியை டைரேக்ட் பண்ணுனோம். நான் அவரிடம் எனக்கு சினிமாதான் ஆசைன்னு சொன்னேன். அப்போ அவர் “சினிமாவுக்கு புறவழி வாசலில் வரக்கூடாது, நேர்வழியில வரணும்னு” சொன்னாரு. அப்போ அது எனக்குப் புரியலை. பிறகு யோசிக்கும்போது புரிஞ்சுது. “மைம் பண்ணி அதல் மூலம் சினிமாவுக்கு வரணும்னு ஆசைப்படாதே, அதுக்குன்னு ஒன்னு இருக்கணும்” அப்படினுதான் அவர் சொல்லியிருக்கார்.
அதன்பிறகு கமல் விருமாண்டி படம் ஆரம்பிக்கும்போது நான் அவரிடம் உதவி இயக்குனராக சேந்தேன். முதலில் அந்த படத்துக்கு ‘சண்டியர்’ன்னு தலைப்பு வச்சுருந்தாங்க. டாக்டர்.கிருஷ்ணசாமி, இது ஒரு சாதிய படம், இதுக்கு எப்படி சண்டியர்ன்னு தலைப்பு வைக்கலாம்னு பிரச்சனைப் பண்ணினார். மறுநாள் ஷூட்டிங் ஆரம்பிக்கணும், திடீர்ன்னு இந்த பிரச்சனை வந்துடுச்சு. இப்போ என்ன பண்ணலாம்னு யோசிச்சு சூட்டிங் போகல, அப்டியே 20 நாள் சூட்டிங் தள்ளிப் போயிடுச்சு. சண்டியஎன்னு பெயர் வச்சதுக்காக 20 நாள் வேலை நடக்காமல் எல்லோரும் உட்காந்துருக்கோம். சரி, ஷூட்டிங்க ட்ராப் பண்ணிட்டு சென்னைக்கே திரும்பி வந்துட்டோம். சென்னை ஆபிஸில் இருக்கும்போது “இங்கையே செட் போடுங்க. உள்ளயே ஷூட்டிங் போவோம். நான் ‘சண்டியர்’ன்னு தான் தலைப்பு வைப்பேன்”னு சொல்லி ஷூட்டிங் தொடங்குனோம். அந்த நிலைமையில் அவர் தான் டைரக்டர், எல்லோரையும் அவர்தான் ஒருங்கினைக்கணும். அவரே தயாரிப்பாளர், அதற்கான பொறுப்பும் இருக்கு. அவரே ஹீரோவும் கூட. அந்த சூழ்நிலையில இப்படியொரு பிரச்சனையும் வந்துருக்கு. இவ்வளவு பிரச்சனையையும் தாண்டி ஒரு நடிகனாக எந்த இடத்திலும் அதைக் காட்ட மாட்டார். ஸ்பார்ட்டில் விருமாண்டியாகவே இருப்பார். அதேபோல் ஒரு இயக்குனராக எல்லாவற்றையும் ரொம்போ அழகா ஒருங்கிணைத்து செயல்பட்டார். எவ்வளவு அழுத்தம் இருந்தாலும் சரி, அதை எந்த விதத்திலும் உன் படைப்பில் கொண்டுவராதே என்பதை நான் அவரிடம் தான் கற்றுக்கொண்டேன்.