கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் மிகத் தீவிரமாகப் பரவிவருகிறது. தமிழகத்திலும் அதிகளவில் கரோனா பாதிப்பு இருந்துவருகிறது. இதனால், முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் வகுப்புகள் எடுத்துவருகின்றனர். இந்நிலையில், சென்னை கே.கே நகரில் அமைந்துள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகள், தங்களின் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகப் புகார்கள் அளித்துள்ளனர். இதையடுத்து அவர் தற்போது போலீசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருக்கிறார். ஆசிரியரின் இந்தச் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...
"பத்மசேஷாத்ரி பாலபவன் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராகப் பணிபுரிந்த ராஜகோபாலன் கடந்த பல ஆண்டுகளாக மாணவிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் மத்தியில் இச்சம்பவம் பெரும் வேதனையை உண்டாக்கியுள்ளது. ஒருசில கயவர்களின் அட்டூழியத்தால் ஒட்டுமொத்த ஆசிரிய சமுதாயத்திற்கும் இச்சம்பவம் தலைகுனிவு ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுகிறது என குற்றவாளிகள் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும்போது, கல்வி நிறுவனத்தில் நடந்த தவறுகளை கவனத்தில்கொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்ட நிர்வாக தலைமை மீதும் நடவடிக்கை எடுத்தால்தான் வருங்காலத்தில் பாதுகாப்பான கல்வி உறுதி செய்யப்படும்.
கரோனா காலத்தில் எத்தனையோ நெருக்கடிகளையும் பொறுத்துக்கொண்டு, பிள்ளைகளின் ஆன்லைன் வகுப்புகளுக்காக செல்ஃபோன், லேப்டாப், இணையதள வசதி, கல்விக்கட்டணம் என தங்கள் சக்திக்கு மீறி அனைத்து படிப்புத் தேவைகளையும் பூர்த்திசெய்யும் பெற்றோர்களை மன உளைச்சலில் உழலச் செய்யக்கூடாது. நெஞ்சு பொறுக்காத இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் மீது தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி, கயவர்கள் யாராக இருந்தாலும், எந்தச் சமுதாயத்தைச் சார்ந்திருந்தாலும், எந்த மதத்தைச் சார்ந்திருந்தாலும் பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.