சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற அந்த விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. அதில் ஒரு பகுதியாக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘என்ஜாய் எஞ்சாமி' பாடலை தீ மற்றும் மாரியம்மாள் பாடியிருந்தார்கள். அப்போது இப்பாடலை எழுதி, அதில் நடித்திருந்த தெருக்குரல் அறிவு இடம்பெறவில்லை. இது தொடர்பாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்ப பின்பு அது சர்ச்சையானது. இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் வகையில் தெருக்குரல் அறிவு "இது அனைவரும் சேர்ந்து செய்த கூட்டு முயற்சிதான், அதில் சந்தேகமில்லை. முடிவில் உண்மைதான் எப்போதும் வெல்லும்" எனக் குறிப்பிட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், " எனது அன்பான நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் குடும்பத்தினருக்கு வணக்கம். ‘என்ஜாய் எஞ்சாமி' பாடலுடன் எனது பயணத்தைப் பற்றி பேச விரும்புகிறேன். கடந்த டிசம்பர் 2020 இல், தீ என்னிடம் இயற்கையைக் கொண்டாடும் ஒரு தமிழ்ப் பாடலை உருவாக்கும் யோசனையைச் சொன்னார். அதன் பிறகு நான் இசையமைத்து, பதிவுசெய்து ‘என்ஜாய் எஞ்சாமி' பாடலைப் பாடினேன். மேலே கூறப்பட்ட என்னுடைய பணியானது உலகளவில் 'தயாரிப்பாளர்' என்று குறிப்பிட்டுள்ளது. தீ, அறிவு மற்றும் நானும் அன்பிற்காக இப்பாடலுக்கு ஒன்றாக இணைந்தோம். அறிவின் பல வரிகளுக்கு தீ இணைந்து இசையமைத்தார், அதே நேரத்தில் அறிவு பாடல் வரிகளை எழுத ஒப்புக்கொண்டார். மீதி ட்யூன் மற்றும் அறிவின் பகுதிகளுக்கு நான் இசையமைத்தேன்.
இப்பாடலுக்காகப் பல நிஜ வாழ்க்கைக் கதைகளை உருவாக்கி, அறிவுடன் பல மணி நேரம் செலவழித்த இயக்குநர் மணிகண்டனுக்கு (காக்கா முட்டை, கடைசி விவசாயி) எங்கள் குழு சார்பாக நன்றி. மேலும் என்ஜாய் என்ஜாமி பாடலின் அடிப்படையே அவரது திரைப்படமான 'கடைசி விவசாயி' படத்திலிருந்து தான் ஈர்க்கப்பட்டது. 'என்ஜாய் எஞ்சாமி'-யை சுற்றி ஒரு அற்புதமான கதையை அறிவு உருவாக்கியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இப்பாடலின் அனைத்து வரிகளுடன் படப்பிடிப்பின் சிந்தனை, ஏற்பாடு மற்றும் பதிவு செய்யும் முறை ஒரு 30 மணி நேரத்திற்குள் செய்யப்பட்டது. இப்பாடலின் வருமானம் மற்றும் உரிமை அனைத்தும் தீ, அறிவு மற்றும் நானே சமமாகப் பகிர்ந்துள்ளோம் என்பதில் நான் வெளிப்படையாக இருக்க விரும்புகிறேன். செஸ் ஒலிம்பியாட் 2022 இல் தீ மற்றும் மாரியம்மாளின் என்ஜாய் எஞ்சாமி பாடியது பொறுத்தவரை, அறிவால் கலந்துகொள்ள முடியவில்லை. ஏனென்றால் அறிவு அமெரிக்காவில் உள்ளார்.
அறிவிடம் எனக்கு மிகவும் பிடித்த படைப்பு வெற்றிமாறன் தயாரிக்கும் 'அனேல் மேல் பனித்துளி' திரைப்படத்தில் இருந்து விரைவில் வெளிவரவிருக்கும் 'கீச்சே கீச்சே' பாடல் தான். இதில் நான் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளேன். 'என்ஜாய் எஞ்சாமி' படத்திற்கு கொடுத்த அதே அன்பை 'கீச்சே கீச்சே' படத்திற்கும் கொடுத்தால் அது கலைஞனாக அறிவுக்குப் பொருத்தமாக இருக்கும். நான் எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுப்பதற்காக எனது தளத்தைப் பயன்படுத்துகிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கலை இரண்டுமே அதற்குச் சான்றாகும். இத்தனை ஆண்டுகளாக எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. இப்பாடலை பற்றி பொதுவெளியிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். மேலும் கலைகளை உருவாக்கி மக்களை ஒன்றிணைப்பதே எனது குறிக்கோள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
🙏🙏 pic.twitter.com/7Rzhk6MXj2— Santhosh Narayanan (@Music_Santhosh) August 1, 2022