இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ‘நீயே ஒளி...’ என்ற தலைப்பில், பிரம்மாண்டமாக ஒரு இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார். இந்நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வருகிற 10 ஆம் தேதி நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 10000 பேர் கலந்துகொள்ளக்கூடிய ஒரு இசை நிகழ்ச்சியாக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்து அவர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார் சந்தோஷ் நாராயணன்.
அவர் பதிலளிக்கையில், “அடுத்த தலைமுறைகளின் தேவை மாறுபடுகிறது. அப்போது ஒரு பெரிய சக்தி வந்தால், கண்டிப்பாக ஒரு மாற்றம் நடக்கும். இவுங்க மட்டும் தான் இதை பண்ணுவாங்க என இல்லை. எல்லாருமே அதிலிருந்து கற்றுக்கொண்டு பண்ணுவாங்க. ரெண்டு... மூனு அல்லது நாலாகும் போது, மிகப்பெரிய மாற்றம் நிகழும். அதனால் நம்முடைய வாழ்வியலும் மாறும் என நம்புறேன்.
விஜய் சார் வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். தனிப்பட்ட முறையில் ஒரு மனிதர் எப்படி இருக்கிறாரோ அதை வைத்து நாம் யூகிக்கலாம். சில பேருக்கு தலைமைப் பண்பு இருக்கும். விஜய் சாரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அதிலிருந்து பார்க்கும் பொழுது, அவரது நேர்மை அரசியலிலும் வெளிப்பட்டால் எல்லாருக்கும் நல்லது.” என்றார்.
மேலும், ‘விஜய் கட்சிக்கு பாடல் இசையமைக்க வாய்ப்பு வந்தால் ஏற்பீர்களா’ என்ற கேள்விக்கு, “இசைக்கு ஒரு பவர் இருக்கிறது. அது மற்றவர்களின் முடிவை மாற்றக்கூடும். ஒருவரிடம் பேசி சம்மதிக்க முடியாததை கலையின் ஏதோவொரு வடிவின் மூலம் சம்மதிக்க வைக்க முடியும். நானாக போய் ஒரு பாட்டு பண்றேன் என கேட்கக்கூடாது. அப்படி ஒரு விஷயம் வந்தால், கட்சியின் கொள்கை, எதை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள், அவர்களின் தொலை நோக்கம் என்ன என்பதை வைத்து அந்த பாடல் ஒரு விளம்பரமாக மட்டும் மாறிவிடக்கூடாது என நினைப்பேன். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு எனக்கு உடன்பாடு இருந்தால், அந்த பாடலை பண்ணி கொடுப்பேன்” என்றார்.