டிக்கிலோனா படம் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் யோகி, மீண்டும் சந்தானத்தை வைத்து இயக்கியுள்ள படம் வடக்குப்பட்டி ராமசாமி. பீபிள் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் தயாரித்துள்ள இப்படத்தில் மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 2 ஆம் தேதி வெளியானது. முன்னதாக ட்ரைலர் வெளியானபோது, அதில் இடம்பெற்ற ஒரு வசனம் பெரியாரை அவதிக்கும் வகையில் இருந்ததாக சர்ச்சையானது. பின்பு இசை வெளியீட்டில் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என சந்தானம் விளக்கமளித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் சந்தானம், மேகா ஆகாஷ், கார்த்திக் யோகி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு சந்தானம் பதிலளித்தார். அப்போது ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், “எந்த கோயிலாக இருந்தாலும் கடவுளை வச்சு காசு பண்றது தப்பு. அதே மாதிரி கடவுள் நம்பிக்கை வச்சு அரசியல் பண்றதும் தப்பு. இதைத்தான் படத்தில் காட்டியிருக்கோம். கடவுள் நம்பிக்கை இருக்கிறவங்களுக்கு இருக்கு. இல்லாதவங்களுக்கு இல்லை. அதனால் இரண்டு பேருக்குமே பொதுவாகத்தான் வச்சிருக்கோம். என்னை பொறுத்தவரையில் கடவுள் என்பது இருக்கு. நான் சாமி கும்புடுகிறவன். ஒரு ஆன்மீகவாதி” என்றார்.