ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'மகாமுனி'. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். அப்போது விழாவில் இயக்குநர் சாந்தகுமார் பேசும்போது...
![santhakumar](http://image.nakkheeran.in/cdn/farfuture/czabCXZUkChFrv0Fg4TozFfoNMVKzr-DyOWftQDMLEI/1567498066/sites/default/files/inline-images/magamuni-%2828%29.jpg)
''ஒரு அலுவலகத்தில் வேலை செய்யும்போது எவ்வளவு நேரம் வேலை செய்தோம் என்று எல்லாருக்குமே தெரியும். ஆனால் இது மாதிரியான ஸ்கிரிப்ட் வேலை செய்யும்போது அப்படியிருக்க முடியாது. இந்தப் படத்திற்கான ஸ்கிரிப்ட்டை தயார் செய்யும்போது எனது தனிப்பட்ட வாழ்க்கையும் அதில் கலந்திருக்கிறது. இதனால் எனது மனைவிக்கும், தயாரிப்பாளருக்கும் மட்டும்தான் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பது தெரியும்.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சார்கிட்ட அவ்வப்போது ஸ்கிரிப்ட் எந்த நிலைமையில் இருக்கிறது என்பதைச் சொல்லிக் கொண்டேயிருந்தேன். இந்த நிறுவனத்தை நான் தேர்ந்தெடுத்தமைக்குக் காரணம் அது ஞானவேல்ராஜா சாருக்காகத்தான். அவர் எந்தவிதமான அழுத்தத்தையும் எனக்குக் கொடுக்கவில்லை. அவர் அவ்வப்போது ‘ஸ்கிரிப்ட் வேலை முடிஞ்சிருச்சா?’ என்று கேட்பார். நான் ‘இல்லை’ என்பேன். அவர் அதற்கு வருத்தமும் பட்டதில்லை. அவர் என்னிடம் காட்டிய பொறுமையும் புரிதலும் என்னை நெகிழ வைத்தது. எனக்குக் கிடைத்த இந்தக் குழு மிகச்சிறந்த வேலையைச் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்'' என்றார்.