இந்தி மொழியை ஆட்சி மொழியாக மாற்ற வேண்டும் என்று சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் விவாதத்திற்கு உள்ளானதோடு அமித்ஷாவின் பேச்சிற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக ஏ.ஆர் ரஹ்மான் ழகரம் தாங்கிய தமிழ் அன்னையின் புகைப்படத்தை பகிர்ந்தார். ஏ.ஆர் ரஹ்மானை தொடர்ந்து இந்தி மொழிக்கு எதிராக கன்னட நடிகர் கிச்சா சுதீப் ஒரு பட விழாவில் 'இந்தி தேசிய மொழி இல்லை' என பேசியிருந்தார். இது குறித்தான பேச்சிற்கு இந்தி நடிகர் அஜய் தேவ்கன் தனது ட்விட்டர் பக்கத்தில் 'இந்தி தான் நமது தேசிய மொழி. உங்கள் கருத்துப்படி இந்தி மொழி தேசிய மொழி இல்லை என்றால் ஏன் கன்னட படங்களை டப் செய்து இந்தியில் ஏன் வெளியிடுகிறீர்கள்' என கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு கிச்சா சுதீப், "நீங்கள் இந்தியில் அனுப்பிய பதிவு எனக்கு புரிந்தது. நாம் அனைவரும் இந்தி மொழியை நேசித்து கற்றுக்கொள்வோம். ஆனால் உங்கள் கேள்விக்கு எனது பதிலை கன்னட மொழியில் பதிவு செய்திருந்தால் நிலைமை என்னவாகும் என்று யோசித்தேன். நாங்களும் இந்தியாவை சேர்ந்தவர்கள் அல்லவா" என பதிலளித்தார்.
இந்நிலையில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், என்னை பொறுத்த வரை நம் நாட்டின் தேசிய மொழி சமஸ்கிருதம் தான் என கருத்து தெரிவித்துள்ளார். 'தாகாட்' பட ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சிக்காக டெல்லி சென்றிருந்த போது இந்த கருத்தை கூறியிருக்கிறார். மேலும் "என்னை பொறுத்தவரை இந்திய நாட்டின் தேசிய மொழி சமஸ்கிருதம் தான், ஏனென்றால் இந்தி, ஜெர்மனி, ஆங்கிலம், பிரஞ்சு ஆகிய மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து தான் தோன்றியுள்ளது. அதன் அடிப்படையில் சமஸ்கிருதம் ஏன் நம் தேசிய மொழியாக இருக்கக்கூடாது. இதனை பள்ளிக்கூடத்தில் கட்டாயப்படுத்தாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. இன்று ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக பயன்படுத்தி வருகிறோம். இந்தி, சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் எந்த மொழி இருக்க வேண்டும் என்பதை நாம் தான் ஆழமாக சிந்தித்து ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். தற்போதைய அரசியலமைப்பின் படி இந்தி தான் தேசிய மொழி" என்று கூறியிருந்தார். ஏற்கனவே இந்தி மொழி விவகாரத்தில் திரைபிரபலங்கள் பலர் கூறியிருக்கும் கருத்து சர்ச்சை ஆன நிலையில் தற்போது கங்கனா ரணாவத் கூறிருக்கும் இந்த கருத்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.