சஞ்சு திரைப்படம், ராஜ்குமார் ஹிரானி இயக்கி ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகி வசூல் சாதனையை படைத்து வருகிறது. இந்த திரைப்படத்தின் கதை என்ன என்றால் பாலிவுட்டின் சர்ச்சை நாயகனாக வளம் வந்த சஞ்சய் தத்தின் கதை தான். ஆனால், இந்த படத்தில் சஞ்சய் தத்தின் முழு வாழ்க்கையையும் காட்சிப்படுத்தியுள்ளார்களா என்றால் இல்லை. பல முக்கியமான விஷயங்களை தவிர்த்துதான் படம் எடுத்துள்ளார்கள். இதில் சாஞ்சுவின் தயராக நடித்தவர் மனிஷா கொய்ராலா, சாஞ்சுவாக நடித்தவர் ரன்பீர். சஞ்சு வாழ்க்கையின் முக்கிய அங்கமாக விளங்கியவர் நர்கீஸ்! சஞ்சய்தத்தின் தாயார், மறைந்த முன்னாள் மத்திய விளையாட்டு துறை அமைச்சரும் நடிகருமான சுனில்தத்தின் மனைவி, திரையுலகின் முதல் பெண் எம்.பி. "மதர் இந்தியா' படத்தின் மூலம் தேசிய விருது பெற்றவர். அவரது இளம் வயதில் அவரளித்த பேட்டி ஒன்றில் தன்னை பற்றி கூறியது.
நான் கல்கத்தாவில் பிறந்தேன். ஆனால் ஐந்து வயதிற்கெல்லாம் குடும்பத்துடன் பம்பாய் வந்துவிட்டேன். அம்மாவுக்கு கல்கத்தாவில் வசிப்பதற்கு துளியளவுகூட விருப்பமில்லை. அம்மாவுக்குப் பாட்டுப் பாடுவதோடு சினிமாவில் வசனம் எழுதுவதிலும் ஈடுபாடு இருந்தது. அவர்தான் இந்திப்படவுலகத்தில் முதல் பெண் டைரக்டர். எனவே எங்கள் வீட்டிற்குச் சினிமா, சங்கீதம் என்று பல துறைகளிலிருந்து வருபவர்கள் அடிக்கடி வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அம்மா டைரக்ட் செய்த படம் ஒன்றுக்கு ஒரு குழந்தை நட்சத்திரம் தேவைப்பட்டது. அந்தப் படத்தில் என்னை நடிக்க வைத்தனர். அப்பொழுது எனக்கு ஆறு வயது இருக்கும். அந்த வயதிலேயே எனக்கு நடிப்பில் ஆர்வம் வந்துவிட்டது.
நான் சினிமாவுக்கு வரக்காரணம் மெஹ்கபூப்கான்தான். அவர் அந்தக்காலத்தில் பெரிய டைரக்டர். அம்மாவைப் பார்க்க அடிக்கடி வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். அவர் அப்பொழுது ஒரு படம் எடுத்துக்கொண்டிருந்தார். அதில் நடிக்க ஒரு பெண் தேவைப்பட்டால், "அந்த கதாபாத்திரத்துக்கு என்னை நடிக்க வைத்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும்' என்று அம்மாவிடம் சொன்னார். "அம்மா சாமர்த்தியமாக அவளிடம் இதைப்பத்தியெல்லாம் நான் கேட்க மாட்டேன்' என்று சொல்லிவிட்டார். அம்மா ஒரு நடிகையாக இருந்தாலும் நான் நடிகையாவதை அவ்வளவாக விரும்பவில்லை. ஏனெனில் நடிகைகளுக்கு அந்தக் காலத்தில் சமூக அந்தஸ்து ஏதுமில்லை. இது ஒரு பெரிய மனக்குறையாக அம்மாவுக்குப்பட்டது. மெஹ்கபூப்கான் ஒரு நாள் என்னிடம் வந்து, ""சினிமா படப்பிடிப்பு பார்க்க வருகிறாயா'' என்று கேட்டார். எனக்கு சினிமா படப்பிடிப்பு பார்ப்பதில் எப்பொழுதுமே ஆசை உண்டு. அம்மாவோடு சில படப்பிடிப்புகளைப் பார்த்தும் இருக்கிறேன். எனவே அவர் கூப்பிட்டதும் உடனே போனேன். அங்கு போனதும் ""நர்கீஸ் உன் குரலையும் முகத்தையும் சினிமாவில் பார்க்கிறாயா?'' என்றார்.
எனக்குத் தாளமுடியாத சந்தோஷம். உடனே சரி என்றேன். அடுத்த நாள் மேக்கப்போட்டார்கள். மெஹ்கபூப் கானின் மனைவி எனக்குப் புடவை கட்டிவிட்டார். அதுதான் நான் கட்டிய முதல் புடவை. மோதிலால், சந்திரமோகன் என்ற பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் படப்பிடிப்பில் இருந்தார்கள். ஒரு துண்டு காகிதத்தில் எழுதப்பட்ட வசனம் என்னிடம் கொடுக்கப்பட்டது. அதை ஒரு முறைப் பார்த்துக் கொண்டு நடித்தேன். பர்தூன் ராணி தான் அப்படத்திற்கு ஒளிப்பதிவாளர். அவர் என்னை படம் பிடிக்கும்போது எல்லோரும் கைத்தட்டினார்கள். என்னை ஒரு புது கதாநாயகி என்றார்கள். அவர்களது புதுக்கதாநாயகி கூற்றை மறுத்து இல்லை இல்லை நான் கதாநாயகியில்லை. நான் நடிக்கவே மாட்டேன் என்று கத்தினேன். எனக்கு அழுகையே வந்துவிட்டது. மெஹ்கபூப் எனக்கு ஆறுதல் கூறினார். இதுதான் நான் சினிமாவில் நுழைந்த கதை.
திலீப்குமார் மிகவும் தலை சிறந்த நடிகர். ஆனால் அவருடன் நடிப்பது சற்று சிரமமான காரியம். அவர் ஒரு பாத்திரத்தில் நடிக்க செட்டில் நுழைந்தால் அதுவாகவே இருப்பார். அவர் மனதில் வேறு சிந்தனையே இருக்காது. திலீப் இருக்கும் செட்டில் கதை, வம்பளப்பு, என்று ஒன்றும் இருக்காது. ஒவ்வொருவரும் திலீப் வந்துவிட்டார் என்று வாய்மூடி மௌனமாக இருப்பார்கள். பலமுறை ஒத்திகைகள், ஒவ்வொரு ஒத்திகையின்போதும் நன்றாக மிகவும் நன்றாக வரவேண்டும் என்ற நினைப்போடுதான் நடிப்பார்.
ஆனால் நான் வேறு மாதிரியான நடிகை ஒரே மூச்சில் நடித்து முடித்துவிடுவேன். அப்புறம் ஏதாவது பேசிக்கொண்டிருப்பேன். திலிப் பாத்திரத்தில் தன்னை இழந்து நடிப்பார், கதாபாத்திரம் சரியாக வரவேண்டும் என்பதற்காக கடுமையாக உழைப்பார். நடிக்கும்போது இத்தனை சிரமப்பட வேண்டுமா? என்று நினைக்கத்தோன்றும். ஆனால் படம் முடிந்து போட்டுப் பார்க்கும்போது மனதிற்குச் சந்தோஷமாக இருக்கும்.
ஒவ்வொரு ஆர்ட்டிஸ்டும் உணர்ச்சி வசப்படும் ஆளாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் நான் அதிகமாக உணர்ச்சி வசப்படுபவள், சண்டைக்கும் அப்படித்தான், முன்னே நிற்பேன். அதுபோலவே சீக்கிரமாகவே மனதில் காயப்பட்டுக்கொள்வேன். பிறர் என்னைப்பற்றி குறை கூறுவதைத் தாங்கிக்கொள்ள முடியாது. அப்படியோர் மனநிலையிலேயே சினிமாவுலகில் பயணித்தேன்.
இது அவருடைய ஆரம்பக்கால கதை, இதன் பின்னர் அவருடைய வாழ்க்கையே திருப்பிபோடும் வகையில் நடந்ததுதான் நடிகர் ராஜ் கபூர் உடனான பிரேக்கப். இதனால் மனமுடைந்து இருந்த நர்கீஸின் சங்கடங்களை போக்க வந்தவர் சுனில் தத்." நான் அழுகும் போது என்னை தாங்கிக்கொள்ள எப்போதும் அவரின் தோல் எனக்காக இருக்கும், என் கண்ணீர்துளிகள் அவரது சட்டையில் உரிந்துகொள்வதை அவர் வெளிமக்களிடம் சொல்லி சிரிக்கமாட்டார் என்பது எனக்கு தெரியும்" என்றார். அதேபோல மகனை பிரிந்து, மருத்துவத்திற்காக அமெரிக்கா செல்வதற்குமுன்பு தன் மகன் சஞ்சய் தத்திற்காக எழுதிய கடிதத்தில்," நான் நல்ல மனநிலையில்தான் இருக்கிறேன். உங்க எல்லோரையும் விட்டு மிக தொலைவு செல்ல இருக்கிறேன், என்ன நடக்கப்போகிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால், எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறது. என்னை உங்களிடம் இருந்து பிரிக்கும் அளவிற்கு கடவுள் கொடூரமானவர் அல்ல. எனக்கு தெரியும் நீங்கள் எல்லோரும் என் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளீர்கள் என்று. பிராத்தனை செய்யுங்கள, அதுவே என்னையும், எல்லாவற்றையும் நலமாக வைத்திருக்கும்" என்று அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.