வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், மொட்டசிவா கெட்டசிவா, சார்லி சாப்ளின் 2 போன்ற படங்களில் நடித்தவர் நிக்கி கல்ராணி. இவர் முதலில் மலையாளம் சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர். இவருடைய தங்கை சஞ்சனா கல்ராணி இவர் தற்போதுதான் கன்னட சினிமாத்துறையில் பிரபலமாகி வருகிறார். இவரும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்து வருகிறார்.
இவர் தமிழில் ஒரு காதல் செய்வீர் என்ற் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தற்போது விஜய் டிவி ராமருக்கு ஜோடியாக ‘போடா முண்டம்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
சஞ்சனா கல்ராணி பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றுக்கு சென்று இருந்தார். அதே நிகழ்ச்சிக்கு இந்தி பட தயாரிப்பாளர் வந்தனா ஜெயின் என்ற பெண் தயாரிப்பாளரும் வந்து இருந்தார். இரவு நடைபெற்ற மது விருந்தில் சஞ்சனாவுக்கும், பெண் தயாரிப்பாளர் வந்தனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட பின்னர் அது கைகலப்பாக மாறியதாக சொல்லப்படுகிறது.
இருவருக்கும் மோதல் தீவிரமாகி சஞ்சனா கல்ராணி கோபத்தில் பீர் பாட்டிலை எடுத்து தயாரிப்பாளர் முகத்தில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் தயாரிப்பாளருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கோப்பான் பார்க் போலீஸ் நிலையத்தில் தயாரிப்பாளர் புகார் செய்திருக்கிறார். சஞ்சனா கல்ராணி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அதில் குறிப்பிட்டு இருந்தார். இந்த மோதல் கன்னட திரையுலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து சஞ்சனா கல்ராணி ட்விட்டரில் தெரிவிக்கையில், “என்னை பற்றி உலாவரும் தகவல்கள் அனைத்தும் அடிப்படையில்லாத வதந்திகளே. என்னை பற்றி குற்றம்சாட்டும் அந்த இன்னொரு பெண்ணிடம் எந்த விதமான ஆதாரமும் இல்லை. என் குடும்பம் மற்றும் என் அம்மா குறித்து மிகவும் மோசமான அருவெறுக்க வார்த்தைகளால் திட்டினார். அதனை இங்கு என்னால் குறிப்பிடக்கூட முடியாது. நான் பதிலுக்கு என்னிடமிருந்து விலகி இரு என்று கத்தினேன். அவர் உடனே என்னைக் கைது செய்து, என் திரை வாழ்க்கையை முடக்கி, என் பெயரைக் கெடுத்து, என்னை சிறையில் அடைத்து, என் மொத்த குடும்பத்தையும் முடித்துவிடுவதாக மிரட்டினார்.
இந்தப் பெண் நான் தொடர்பில் இருக்க விரும்பாத, எப்போதும் பப்லிசிட்டிக்காக அற்பமான வழிகளைத் தேடும் ஒருவர். இந்த பிரச்சனை குறித்து ஒரு முடிவுக்கு வருவதற்கு முன் அவரைப் பற்றி ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள். கடந்த 10 வருடங்களாக நான் இந்தத் துறையில் மிக மிகக் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். எனக்குப் படங்களில் வேலை செய்வது மட்டுமே தெரியும். வேறு எதுவும் தெரியாது. நான் இந்த சர்ச்சைக்குள் இழுக்கப்பட்டு, அவதூறு பேசப்பட்டு, இலக்காக்கப்பட்டுள்ளேன்.
அந்தப் பெண் எனது மொபைலைப் பறித்து என்னை முரட்டுத்தனமாக நடத்தி, என் கையை முறுக்கி இருக்கும் வீடியோவே ஒரு ஆதாரம். அவரது முகத்திலோ தலையிலோ காயப்பட்டிருப்பது போல அந்த வீடியோவில் தெரிகிறதா? விஸ்கி பாட்டில் உடைக்கப்பட்டிருந்தால் அதற்கான அறிகுறி, இரத்தக் கறை இருக்காதா? அப்படியான ஒரு பொறுப்பற்ற செயலை என் ஒட்டு மொத்த வாழ்விலும் நான் செய்ய மாட்டேன். இது எனது பெயரைக் கெடுக்க அவரது திட்டம், அவர் பரப்பும் ஆதாரமில்லா புரளி.
நான் யாரைப் பற்றியும் அவதூராகப் பேச விரும்பவில்லை. ஆனால், இந்தப் பெண் இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் பிரபலமாக இருந்த ஒரு சுழற்பந்து வீச்சாளரை இலக்காக்கி, அவரை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி மிரட்டியவர். திருமணம் செய்துக்கொள்ள அந்த நபர் மறுக்கையில் அவர் குறித்து அவதூறு பேசி, இந்திய கிரிக்கெட் அணியிலிருந்தே நீக்கச்செய்தார்.
தற்போது நான் இந்தப் பெண்ணிடம் சிக்கி உள்ளேன். தயவு செய்து எனக்கு ஆதரவு கொடுங்கள். ஆதாரமில்லாத எந்த செய்தியையும் உங்கள் ஊடகங்களில் கொண்டு வராதீர்கள். அவதூறிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள். இந்த கேவலமான சண்டையை நான் தொடர விரும்பவில்லை. நானும், என் மொத்த குடும்பமும் போலீஸ் பாதுகாப்பிற்காக வேண்டுகோள் வைத்திருக்கிறோம். எனக்கு இந்த முக்கியமான நேரத்தில் ஆதரவு தந்த பெங்களூரு போலீஸாருக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.