Skip to main content

வழிப்பறியில் சிக்கிய நடிகை சஞ்சனா சிங் 

Published on 25/06/2018 | Edited on 25/06/2018

 

sanjana reddy

 

 

 

'ரேணிகுண்டா' படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சஞ்சனா சிங் கடைசியாக சந்தானம் நடிப்பில் வெளியான 'சக்க போடு போடு ராஜா' படத்தில் நடித்தார். அதன் பின் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெற்று வரும் இவர் எப்போதும் உடற்பயிற்சிக்காக சைக்கிள் பயணம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி நேற்று காலை 6 மணி அளவில் அண்ணா நகரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு வழக்கம்போல் சைக்கிளிலேயே சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சஞ்சனா அண்ணாநகர் சிந்தாமணி சிக்னல் அருகே சென்றுகொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் அவரிடமிருந்த செல்போனை பறித்துச் சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த இவர் இதுகுறித்து அண்ணாநகர் போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செல்போன் பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சஞ்சனா சிங் பயன்படுத்திய செல்போன் நம்பரை வைத்து போலீசார் துப்புதுலக்கி வருகிறார்கள்.

 

 

 

இந்நிலையில் போலீசில் புகார் அளித்த பிறகு இது தொடர்பாக சஞ்சனா சிங் நிருபர்களிடம் பேசியபோது... "நான் எப்போதும் வீட்டு அருகில்தான் சைக்கிளில் செல்வேன். தினமும் காலை 5.30 மணியளவில் இருந்து 6.30 மணி வரையில் செல்வது வழக்கம். கொஞ்சம் நீண்ட தூரம் சென்றால் பிட்னஸ் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். கீழ்ப்பாக்கத்தில் உள்ள எனது சகோதரியின் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தேன். எனக்கு சரியாக வழி தெரியாததால் செல்போனில் ‘‘கூகுள் மேப்’’ பார்த்தபடியே சைக்கிள் ஓட்டிச் சென்றேன். அப்போது தான் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் எனது செல்போனை திடீரென்று பறித்துச் சென்றான். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் திருடன் திருடன் என்று சத்தம் போட்டேன். சத்தம் போட்டுக் கொண்டே சைக்கிளை நான் வேகமாக ஓட்டினேன். ஆனால் செல்போனை பறித்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுவிட்டான். இதனால் என்ன செய்வது என்றே எனக்கு தெரியவில்லை. மயக்கம் வந்தது போல் ஆகிவிட்டது. செல்போன், செயின்பறிப்பு அதிகமாக நடப்பதாகவும், எனவே பொதுமக்கள் சாலையில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் செய்திகளை பார்த்தேன். நான் எப்பொதுமே கவனமாகத்தான் இருப்பேன் காலை 6 மணிக்கு இப்படி நடக்கும் என்று யாருக்கு தெரியும். செல்போனில் உள்ள போட்டோ, வீடியோ எல்லாம் போய்விட்டது. எனவே செல்போனில் பேசிக் கொண்டு செல்பவர்கள் கவனமாக செல்லுங்கள். செயின் அணிந்து செல்பவர்களும் அதனை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்" என்றார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்