இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருந்த இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.
சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். குணா குகையில் நடக்கும் கதை என்பதால் கமல் நடித்த குணா பட பாடலான ‘கண்மணி அன்போடு காதலன்...’ பாடலை படக்குழு படத்தில் முக்கியமான இடத்தில் பயன்படுத்தியிருந்தது. அது தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே சமயம் படத்தில் இளைஞர்கள் உதவி கேட்டு கொடைக்கானல் காவல் நிலையத்திற்குச் செல்லும் போது, அவர்களுக்கு உதவி செய்யாமல், அவர்களை அடிப்பதாக காட்சிகள் இடம்பெற்றிருந்தது சில சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் உண்மை சம்பவத்தின் போது போலீஸ் கடுமையாக நடந்து கொண்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேரளவைச் சேர்ந்த ஷிஜு ஆபிரஹாம் என்பவர், தமிழக உள்துறைச் செயலரிடம் புகார் கொடுத்துள்ளார். தமிழக உள்துறைச் செயலர் பி.அமுதா, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல்துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.