மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள சம்யுக்தா தமிழில் களரி, ஜூலை காற்றில், எரிடா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'வாத்தி' படத்தில் நடித்திருந்தார். இப்போது தெலுங்கில் அவர் நடித்துள்ள படம் 'விருப்பாக்ஷா'. இதில் சாய் தரம் தேஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். பிவிஎஸ்என் பிரசாத் தயாரித்திருந்த இப்படத்தை கார்த்திக் தண்டு இயக்கியுள்ளார். கடந்த 21ஆம் தேதி வெளியான இப்படம் அங்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தமிழில் டப் செய்யப்பட்டு வருகிற மே 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழகத்தில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் சாய் தரம் தேஜ், சம்யுக்தா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டு பேசினர். அப்போது சம்யுக்தா பேசுகையில், "எல்லா விதமான கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. அதை விட நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் அமைந்தால் இன்னும் மகிழ்ச்சி.
பொதுவாக ஒரு கமர்ஷியல் படத்திற்கு ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் பாலக்காடு பகுதியை சார்ந்த ஒருவர். அங்கே ரஜினி சார் படம் வெளியானால் பொள்ளாச்சியில் இருந்து ரசிகர்கள் கூட்டம் வரும். அந்த கூட்டத்தினால் எங்களுக்கு 2 மணி நேரம் முன்னாடியே ஸ்கூல் விட்டுருவாங்க. அப்படி கூட்டத்தோடு திரையரங்கில் சென்று படம் பார்ப்பது ஒரு அனுபவம். அது எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த ஸ்க்ரீனில் நான் இருந்தால் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்" என்றார்.