Skip to main content

தெலுங்கு திரையுலகிலும் பாலியல் துன்புறுத்தல் - சமந்தாவின் பதிவால் பரபரப்பு

Published on 31/08/2024 | Edited on 31/08/2024
Samantha  urges Telangana government to publish subcommittee report regards hema commitee report impact

மலையாளத் திரையுலகில் பாலியல் ரீதியான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்திய திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரபல நடிகை ஒருவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பாலியல் கொடுமை அரங்கேறியது. இந்த சம்பவத்தின் விளைவாக படப்பிடிப்பில் ஈடுபடும் நடிகைகள், பெண்கள் என அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது, இந்த குழுவின் ஆய்வறிக்கை அம்மாநில முதல்வரிடம் 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை வெளியாகாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 

இந்த ஆய்வறிக்கை வெளியானதை தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை பொதுவெளியில் தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் நடிகை ஸ்ரீலேகா மித்ரா அளித்த புகாரில் இயக்குநர் ரஞ்சித் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதில் ரஞ்சித் குற்றத்தை மறுத்து, தனது மலையாள சினிமா அகடாமி தலைவர் பொறுப்பிலிருந்து விலகியிருந்தார். நடிகை ரேவதி சம்பத் நடிகர்கள் சித்திக், ரியாஸ் கான் ஆகியோர் மீது அளித்த புகாரில் சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் இருவரும் குற்றத்தை மறுக்க, சித்திக் தனது நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகினார். நடிகை மினுமுனீர் அளித்த புகாரில் நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ஜெயசூர்யா மீது மேலும் ஒரு நடிகை புகார் கொடுத்ததால் அவர் மீது இரண்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

பாலியல் குற்றங்கள் தொடர்ந்து எழுந்து வந்ததால் மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் மோகன்லால் உட்பட 17 செயற்குழு உறுப்பினர்கள் கூண்டோடு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்தனர். இதனிடையே பாலியல் குற்றங்கள் தொடர்பாக அம்மாநில அரசு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து ஒரு வாரத்திற்குள் ஹேமா கமிட்டி ஆய்வறிக்கையின் முழு வடிவத்தையும் வழங்கக் கோரி கேரள அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் சமந்தா, வுமன் இன் சினிமா கலெக்டிவ் ( Women In Cinema Collective) வெளியிட்ட அறிக்கையைத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, “தெலுங்குத் திரையுலகில் பணியாற்றும் பெண்கள் அனைவரும் ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்கிறோம். பாலியல் துன்புறுத்தல் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட தி வாய்ஸ் ஆஃப் வுமன் குழுவின் அறிக்கையை வெளியிடுமாறு தெலுங்கானா அரசாங்கத்தை நாங்கள் இதன்மூலம் வலியுறுத்துகிறோம்” என்று உள்ளது. இதன் மூலம் தெலுங்கு திரையுலகிலும் பாலியல் துன்புறுத்தல் நடக்கிறதா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. மேலும் சமந்தாவின் இந்த பதிவு தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்