கானா பாடகி இசைவாணி, ‘ஐ எம் சாரி ஐயப்பா’ என்ற தலைப்பில் ஒரு பாடல் பாடியிருந்தார். இந்தப் பாடல் பா.ரஞ்சித் தலைமையிலான நீலம் கலாச்சார மையம் சார்பில் வெளியிடப்பட்டது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலையில் மகரவிளக்கு, மண்டல பூஜை சீசன் தொடங்கியுள்ள நிலையில், இந்த பாடல் தற்போது சர்ச்சையாகி உள்ளது. இந்தப் பாடலை எதிர்த்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஐயப்பன் பக்தர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் செல்வகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கோவை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில், “ஜயப்பன் மீதும் அவருக்கு மேற்கொள்ளும் விரதங்களை கொச்சைப்படுத்தும் வகையிலும் கானா பாடகி இசைவாணி மற்றும் நீலம் கலாச்சார மையம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனங்களைப் புண்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது” எனக் குறிப்பிட்டு பாடகி இசைவாணி மீதும் பா.ரஞ்சித் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து நீலம் பண்பாட்டு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஐ எம் சாரி ஐயப்பா(I am sorry Iyyappa) என்கிற பாடல் ஆண்டாண்டு காலமாய் இங்கு பேசப்பட்டு வரும் கோயில் நுழைவு உரிமையைக் கோருகிற வரிகளோடு துவங்கி, பின் பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் பொதுவான உரிமைகளைக் கோரும் பாடலாக அமையப்பெற்றது. இப்பாடலை பாடியது இசைவாணி, எழுதி இசையமைத்தது ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’(The Casteless Collective) 2018ஆம் ஆண்டு 'மெட்ராஸ் மேடை' என்கிற இசை நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழு. அதற்குப் பின்னால் பல்வேறு மேடைகளில் பாடல்களைப் பாடி வருகிறது. ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டு, இசைவாணியால் பல்வேறு மேடைகளில் பாடப்பட்ட பாடலின் முதல் வரியை மட்டும் எடுத்துக் கொண்டு கடந்த ஒரு வார காலமாகச் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறது ஒரு குழு.
அடிப்படையில் அது ஐயப்பன் சம்மந்தப்பட்ட பாடலே அல்ல. பெண்களின் பல்வேறு உரிமைகளைக் கோரும் வரிகளில் கோயில் நுழைவைக் கோரும் உரிமையும் அதில் இடம்பெற்றிருந்தது. இந்த முழு உண்மையை மறைத்து, அந்த மொத்தப் பாடலும் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிரானதாக இருக்கிறது என, சமூக வலைதளத்தில் பொய் செய்தியைப் பரப்ப முயற்சிப்பதின் மூலம், சமூகப் பதற்றத்தை உருவாக்கி விட முடியும் என முயல்கிறது ஒரு கூட்டம். கடந்த ஒரு வார காலமாக பாடகர் இசைவாணியை ஆபாசமாகச் சித்திரித்தும், தொலைபேசியில் மிரட்டியும், சமூகவலைதளத்தில் அவதூறுகளைப் பரப்பியும் வருகின்றனர். ஒரு கலைஞர் மீது வைக்கப்படும் குறி என்பது தனிநபர் சம்மந்தப்பட்டது கிடையாது. அந்த மிரட்டல் இனி உருவாகி வரவிருக்கும் கலைஞர்களுக்கும் சேர்த்தே என்பதுதான்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சம்மந்தப்பட்டவர்கள் மீது ஆதாரத்துடன் புகார் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் சென்னை மாநகர காவல்துறை உரிய நடவடிக்கைக்கு எடுக்கும் என நம்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.