சமீப காலமாக சினிமாவிலிருந்து விலகியிருந்தார் சமந்தா. தசை அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளதால், அது பூரண குணமடைய தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டு வருகிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்திருந்தார். தமிழில் விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். இப்போது கைவசம் 'சிட்டாடெல்' வெப் தொடர் வைத்துள்ளார். இத்தொடர் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
இதையடுத்து டிராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார். இதையடுத்து மீண்டும் நடிப்பிற்கு திரும்புவதாகத் தெரிவித்திருந்தார். மேலும் உடல்நலம் குறித்த பாட்கேஸ்ட் ஒன்றை வெளியிடுவதாகத் தெரிவித்த அவர், கடந்த மாதம் முதல் அதை தொடங்கி தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதில் சமந்தாவும் அவரது நண்பர் ஊட்டச்சத்து நிபுணர் அல்கேஷும் பேசி வரும் நிலையில், சமீபத்தில் கல்லீரல் குறித்து பேசியிருந்தார். அப்போது, “டேண்டலியன் என்கிற ஒருவகை மூலிகைத் தாவரத்தை சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது” என சமந்தா தெரிவித்ததையடுத்து அவர் பேசியது தவறான கருத்து என ஒரு மருத்துவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்திய எபிசோடில், படப்பிடிப்பில் தான் மயங்கி விழுந்ததாக தெரிவித்துள்ளார். “குஷி படப்பிடிப்பை முடித்துவிட்டு, சிட்டாடல் வெப் சீரிஸில் நடிக்க வேண்டி இருந்தது. அதில் ஆக்ஷன் அதிகம் என்பதால் உடல் ரீதியாக மிகவும் கடினமாக இருந்தது. ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு தளத்திலே மயங்கி விழுந்துவிட்டேன். அந்த சமயத்தில் அல்கேஷ் பெருமளவு உதவினார்” என்றார்.