சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் உள்ளடக்கிய இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து தகுதி பெற்ற 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 வீரர்கள் 16 விளையாட்டுகளில் கலந்துகொண்டு வருகின்றனர். இதுவரை 3 பதக்கங்கள் இந்தியா வென்றுள்ளது.
இத்தகைய சூழலில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார். ஆனால் தற்போது அவர் அதிக எடை காரணமாகப் பெண்களுக்கான 50 கிலோ மல்யுத்தப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் எடை 50 கிலோவுக்கு மேல் சில கிராம் (100 கிராம்) கூடியதால் இந்த தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக உடல் எடையைக் குறைக்க வினேஷ் போகத் இரவு முழுவதும் தீவிர பயிற்சி மேற்கொண்டார். இதன் காரணமாக அவரின் உடல் ஏற்பட்ட நீர்ச்சத்து குறைபாடு காரணமாக வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் வினேஷ் போகத் தகுதி நீக்கத்திற்குப் பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ சில நேரங்களில், மிகவும் உறுதியான நபர்கள் கடினமான தடைகளை எதிர்கொள்கின்றனர். நீங்கள் தனி ஆள் இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு மேலே ஒரு சக்தி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுள்ளது. இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியிலும் நிலைத்து நிற்கும் உங்களின் அசாத்திய திறமை உண்மையிலேயே போற்றத்தக்கது. உங்கள் எற்ற இறக்கங்கள் அனைத்திலும் நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.