தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இசை அமைக்கும் இசை அமைப்பாளர்கள் ஒரு சிலரே அந்த வரிசையில் சாம் சி.ஸ் மிகவும் முக்கியமானவர் . புரியாத புதிர், விக்ரம் வேதா, இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களை தொடர்ந்து இவர் இசையமைக்கும் படம் வஞ்சகர் உலகம். வித்தியாசமான கேங்க்ஸ்டர் கதையை மையமாக வைத்து வெளிவர இருக்கிறது. இந்நிலையில் படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்த சாம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை அணுகியுள்ளார். யுவனும் ஓகே சொல்ல அந்த ரொமான்டிக் மெலோடியை தன் இசையில் யுவனை பாட வைத்துள்ளார். மேலும் இது குறித்து சாம் சி.ஸ் பேசும்போது.... "இசைத்துறையில் நுழைவதற்கு முன்பே, இளையராஜா சார் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் சார் ஆகியோரின் மிகப்பெரிய ரசிகனாக இருந்தேன். ஆனால், 2004-06 காலகட்டத்தில், லட்சக்கணக்கான ரசிகர்கள் போல, நானும் முற்றிலும் யுவன் சார் இசைக்கு அடிமையாகி இருந்தேன். தமிழ் இசைத்துறையின் இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட அவரது இசை என்பது ஒவ்வொரு நபரின் முக்கியமான பகுதியாக மாறி இருந்தது. நான் அவரை ஒரு பாடகராக மிகவும் மதிக்கிறேன். அவருக்குள் நேட்டிவிட்டி மற்றும் மேற்கத்திய கிளாசிக் இசை உள்ளது. எந்த ஒரு பாடகருக்கும் இது மிகப்பெரிய சொத்தாகும். AR ரஹ்மானின் இசையில் மரியான் படத்தில் யுவன் பாடிய "கொம்பன் சூரா" எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்.
வஞ்சகர் உலகம் படத்தில் தனித்துவமான விஷயம் ஒன்றை முயற்சிக்க வேண்டும் என்பது என் ஆசை. அதனால் மட்டும் அல்ல, இயக்குனர் மனோஜ் பீதா மற்றும் ஒளிப்பதிவாளர் இந்த திரைப்படத்தை படமாக்கிய விதத்தை பார்த்த போது எனக்கு வேறு வழியில்லை. ஒவ்வொரு ஃபிரேமும் தனித்தன்மையுடனும், இணையற்ற ஆழமான காட்சியமைப்புகளோடும் இருந்தது. அதனால் என் வழக்கமான முறைக்கு அப்பால் என்னை தள்ளி இயற்கையான ஒலிகளுடன் ஏதாவது செய்ய முயற்சி செய்தேன். குறிப்பாக, மதன் கார்க்கி எழுதிய இந்த காதல் பாடல் மிகவும் புத்துணர்ச்சியோடு இருந்தது. 'தீயாழினி' என்ற ஆரம்ப வார்த்தையை வைத்தே இதை அறியலாம். கரு படத்தில் 'கொஞ்சாளி' என்ற ஒரு சிறப்பு சொல்லை அவர் கொடுத்திருந்தார். பாடலுக்கு இசையமைத்த உடனே, அந்த பாடலானது இயல்பான ஒரு குரலை கோரியது என்று உணர்ந்தேன். என் மனதில் உதித்த முதல் மற்றும் ஒரே பெயர் யுவன் ஷங்கர் ராஜா தான். நள்ளிரவு 3 மணிக்கு நாங்கள் பாடலை பதிவு செய்தோம். யுவன் ஷங்கர் ராஜா ஒரு மணி நேரத்திற்குள் முழு பாடலையும் நிறைவு செய்தார்" என்றார்.